சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்குக் கட்டணம்: உயர்நீதிமன்றம் ஒப்புதல்!
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்குக் கட்டணம்: உயர்நீதிமன்றம் ஒப்புதல்!
UPDATED : அக் 10, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
செட்டிநாடு ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், பி.எஸ்.ஜி., இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், ஸ்ரீமூகாம்பிகை இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் ஆகிய சுயநிதி மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சம் வரை கட்டணத்தை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு நிர்ணயம் செய்தது.
இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து, இக்கல்லூரிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அரசுக் குழு நிர்ணயித்துள்ள
கட்டணம் குறைவாக உள்ளது. ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வீதம் கட்டணம் வசூலிக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டது.
அரசுக் குழு நிர்ணயித்துள்ள கட்டணம் மிகவும் அதிகம். இதனைக் குறைக்க வேண்டும் என்று கோரி எஸ்.எஃப்.ஐ., சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சங்கம் சார்பில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான எந்த முயற்சியும் சரியாக இருக்காது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
கட்டண நிர்ணயக் குழுவில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட், டாக்டர், துணைவேந்தர், அரசுத் துறை செயலாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கட்டண நிர்ணயம் செய்வதற்கு முன்னதாக அனைத்து முக்கிய அம்சங்களும் அலசி ஆராயப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் தங்களது நிலையை, இக்குழுவிடம் தெரிவிக்கவும் உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் மீது எந்தவித புகாருக்கும் இடமில்லாத நிலையில், கட்டண நிர்ணயக் குழுவின் ஆணையில் தலையிடுவது சரியாக இருக்காது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில் நிதி உதவித் திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு தனது பரிந்துரைகளில் கூறியிருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
