பிஎச்.டி., மாணவருக்கு வீடியோ கான்பரசிங் மூலம் நேர்காணல் தேர்வு
பிஎச்.டி., மாணவருக்கு வீடியோ கான்பரசிங் மூலம் நேர்காணல் தேர்வு
UPDATED : அக் 14, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இன்ஸ்டிட்யூட் ஆப் பிளாஸ்மா ரிசர்ச் கல்வி நிலையத்தில் 2001ல் சேர்ந்த மனஸ் குமார் (வயது 31) 2007ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது ஆய்வுக் கட்டுரையை குஜராத் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். அதன்பிறகு இன்ஸ்டிட்யூட் ஆப் பிளாஸ்மா ரிசர்ச் கல்வி நிலையத்தில் அதற்கு அடுத்த நிலையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காகத் தேர்வு செய்யப்பட்டார். அக்டோபர் முதல் தேதியில் அவர் அந்த ஆய்வுப் பணியில் சேர வேண்டும். ஆனால், அவருக்கு பிஎச்.டி., பட்டம் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே, கவுகாத்தியில் உள்ள சென்டர் பார் பிளாஸ்மா பிசிக்ஸ் பேராசிரியர் கே.எஸ். கோஸ்வாமி, பிரான்சில் உள்ள ஐ.டி.இ.ஆர்., துணை டைரக்டர் ஜெனரல் ஏ. டாங்கா ஆகியோரும் அந்த ஆய்வுக் கட்டுரையை மதிப்பீடு செய்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவித்துவிட்டனர். வைவா எனப்படும் பொது நேர்காணல் தேர்வில் நேர்காணல் தேர்வு முடிந்த பிறகுதான் பிஎச்.,டி., பட்டம் பெற முடியும். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அறிஞர்கள், பார்வையாளர்கள் ஆகியோரின் கேள்விகளுக்கு பிஎச்.டி., பட்டம் பெறும் மாணவர் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம்.
குஜராத் பல்கலைக்கழக விதிமுறைப்படி, நேர்காணல் தேர்வு நடக்கும் போது ஆய்வு மாணவருடன் அவரது கைடும் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் மனஸ் குமாரின் கைடு, தற்போது பிரான்சில் ஐ.டி.இ.ஆர்., அமைப்பில் பணிபுரிகிறார். எனவே, அவரும் இந்த நேர்காணல் தேர்வில் பங்கேற்கும் வகையில் வீடியோ கான்பரசிங் வசதியைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது என்று குஜராத் பல்கலைக்கழக டீன் பி.வி. பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ கான்பரன்சிங் வசதி மூலம் நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு, மனஸ் குமாருக்கு பிஎச்.டி., பட்டம் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டது.
