எம்.எஸ்சி., சாப்ட்வேர் இன்ஜி. பி.இ., இன்ஜி.க்குச் சமமில்லையா?: வழக்கு
எம்.எஸ்சி., சாப்ட்வேர் இன்ஜி. பி.இ., இன்ஜி.க்குச் சமமில்லையா?: வழக்கு
UPDATED : அக் 22, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவர் அருண்சௌரி தாக்கல் செய்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பெரியார் பல்கலைக்கழகம் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஜோதிமணி உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத்தில் அருண்சௌரி தாக்கல் செய்த மனு விவரம்:
நாமக்கல் மாவட்டம் அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரியில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி., சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பை படித்தேன். பெரியார் பல்கலைக்கழகத்தின் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி துறை எனக்குப் பட்டத்தை வழங்கியது. இந்தப் படிப்பை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழகம் ஆகியவை அங்கீகரித்துள்ளன.
சிறுவயதிலிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்பது விருப்பம். தொழில்நுட்பப் பட்டதாரி என்ற முறையில் நான், தொழில்நுட்பப் படிப்புக்கு விண்ணப்பித்தபோது எனது மனு நிராகரிக்கப்பட்டது. எம்.எஸ்சி., சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு இன்ஜினியரிங் பட்டம் அல்ல. அதனை, பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு இணையாகக் கருத முடியாது என்று ராணுவத்தில் கூறிவிட்டார்கள்.
இதையடுத்து பெரியார் பல்கலைக்கழகத்தை அணுகியபோது, இந்த எம்.எஸ்சி., படிப்பு பி.இ., படிப்புக்கு சமம் இல்லை என்று பல்கலைக்கழகமும் கூறிவிட்டது. இது சட்டவிரோதமானது. ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பு தங்களது வரம்புக்குள் வரவில்லை என்று ஏ.ஐ.சி.டி.இ., கூறியுள்ளது. மாணவர்களின் இந்த சிக்கலான பிரச்சினை குறித்து பல்கலைக்கழகம் அக்கறையில்லாமல் உள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., சட்ட விதிகளை மீறி, இன்ஜினியரிங் கல்லூரியில் இந்தப் படிப்பை வழங்க அனுமதித்ததற்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்க வேண்டும். கடந்த 21 மாதங்களாக எந்த வித நிவாரணம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறேன். எனக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் மாணவர் அருண்சௌரி கூறியிருந்தார்.
