தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தரமான கல்விக்கு சுயமான முயற்சி: சென்னை பல்கலை துணைவேந்தர் பேட்டி!

தரமான கல்விக்கு சுயமான முயற்சி: சென்னை பல்கலை துணைவேந்தர் பேட்டி!

தரமான கல்விக்கு சுயமான முயற்சி: சென்னை பல்கலை துணைவேந்தர் பேட்டி!


UPDATED : அக் 25, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்விமலருக்கு துணைவேந்தர் ராமச்சந்திரன் அளித்த சிறப்பு பேட்டி:
இந்திய கல்வி முறையை மாற்ற வேண்டும் என கல்வியாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனரே?
முந்தைய பிரிட்டன் கல்வி முறையை இந்தியாவும் பின்பற்ற தொடங்கியது. தற்போது பிரிட்டனில் கல்வி முறை மாறிவிட்டது. ஆனால், இந்தியாவில் இன்னும் மாற்றப்படவில்லை. அமெரிக்காவில் ஒவ்வொரு கல்லூரியும் தன்னாட்சி பெற்றவை; பல்கலைக் கழகங்களாக செயல்படுகின்றன. இங்கு தான் ஒரு பல்கலைக்கழகத்தின்கீழ் 250 கல்லூரிகள் உள்ளன. இதனால், 2 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு நடத்துதல், பட்டம் வழங்குதல் என பல்வேறு பணிகளை ஒரே பல்கலைக்கழகம் செய்ய வேண்டியுள்ளது.
பேராசிரியர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகிறதே?
பி.எச்டி., அல்லது செட்/நெட் தேர்ச்சி பெற்றவர்கள் தான் முதுநிலைக்கும், எம்.பில்., படித்தவர்கள் இளநிலை படிப்புகளுக்கும் ஆசிரியராக முடியும். ஆனால், செட்/நெட் தேர்வு எழுதுவோரில் தேர்ச்சி விகிதம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே. பி.எச்டி., படிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
30 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் தான் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தது. தற்போது, அரசுப் பணிகளை விட தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. சாதரணமாக இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. பி.எச்டி., முடித்த பேராசிரியர்களுக்குக் கூட அத்தகைய சம்பளம் கிடைப்பதில்லை. இந்த மாற்றத்தால், முதுநிலை கல்வியில் சேர்க்கை பெறுபவர்களின் எண்ணிக்கையே வெகுவாக குறைந்து வருகிறது.
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையால், கல்லூரி ஆசிரியர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட உள்ளது. இதனால், திறமையானவர்கள் ஆசிரியர் பணி செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
நம் நாட்டின் கல்வித் தரம் எந்த நிலையில் உள்ளது?
குண்டு வீச்சில் நாசமடைந்த ஜப்பான், உலக நாடுகள் வியக்கும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு முதல் காரணம் அவர்களது தேசப்பற்று. அவர்களைப்போல நமது நாட்டில் ஒவ்வொருவரும் மனதார நினைத்துப் பார்க்கவேண்டும் தனக்கு உண்மையாகவே தேசப்பற்று இருக்கிறதா என்று?
துவக்கக் கல்வியை பொறுத்தவரை முன்பெல்லாம் பள்ளி இடைநிற்றல் விகிதம் 65 சதவீதமாக இருந்தது. இப்போது, 96 சதவீதம் மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த வளர்ச்சியில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு.
நாட்டில் தரமான கல்வி நிறுவனங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இன்ஜினியரிங், கலை அறிவியல் கல்லூரிகள் என கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல அதிகரித்து வருகின்றன. ஆனால், அவற்றில் தரமான கல்லூரிகள் என்று பார்த்தால், மிக சொற்பம்.
இன்ஜினியரிங், மருத்துவம் ஆகிய படிப்புகளில் அரசு கல்லூரிகளை கடந்து தனியார் கல்வி நிறுவனங்கள் முதலிடத்தை பிடிக்கத் துவங்கியுள்ளன. அவை அக்கல்வி நிறுவனங்களின் தரத்தால் மட்டுமே சாத்தியம். புற்றீசல் போல பெருகிய கல்லூரிகள் போதிய தரத்தை பெறவில்லை என்றால், காலப்போக்கில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.
அதேபோல சிறந்த கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தான் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும் என்றில்லை. தரமிக்க கல்வி நிறுவனங்களில், அதற்கான வாய்ப்புகளுக்கு தகுதி பெறச்செய்கின்றனர். தரமான கல்வி நிறுவனங்களால் மாணவரின் திறன் சரியாக ஆராயப்படுகின்றன. சராசரியான கல்லூரிகளில் அவை இல்லை.
தரமான கல்வி கிடைக்கிறதோ? இல்லையோ?  ஒவ்வொருவரும் சுயமாக தனது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். அதுவே சாதனைக்கு வழி. தன்னுடைய தரத்தை உயர்த்திக்கொண்டவர்கள் மேலே உயர்ந்து கொண்டே செல்கின்றனர்.
கல்வித் தரம் உயர உங்களது ஆலோசனை...
எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் செயல்வழிக் கல்வி முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனையை வளர்க்கவும், திறனை கண்டறியவும் உகந்த இதுபோன்ற திட்டத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிப்பதே ஆசிரியர்கள்!
பழைய பாடத்திட்டத்திலேயே ஊறிப்போகாமல் ஆசிரியர்கள் புதுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் கல்வியில் சிறந்து விளங்கியவர்கள் ஆசிரியராக விரும்பினர். தற்போதைய பிறதுறை வாய்ப்புகளால், கல்வியில் சராசரியாக உள்ளவர்களே பெரும்பாலும் ஆசிரியர் பணிக்கு வருகின்றனர்.
எனினும், தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ப அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும். பாக்ஸ்ப்ரோ, போர்ட்ரான் போன்ற படிப்புகளை கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அவர்களது கல்வி காலத்தில் படித்திருப்பார்கள். அதற்காக, அவற்றை மட்டுமே தற்போதைய மாணவர்களுக்கு சொல்லித்தர இயலாது.
அதிக சம்பளம், உயர்ந்த பணி ஆகியவற்றை தேடியே ஓடிக்கொண்டிருக்கிறோம். சேவை மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மையில் ஆசிரியர் பணி செய்ய விரும்புபவர்கள் மிக குறைவு.
தனிமனித, சமுதாய வளர்ச்சிக்கு கல்வி தான் அடிப்படை. இந்தியாவை பொறுத்தவரை, ஒரேமாதிரியான கல்வி முறை அமைய வேண்டும். குறைந்தபட்சம், தரமான பிளஸ் 2 மற்றும் தொழில்சார் பயிற்சி ஆகியவற்றை அனைவரும் பெற்றிருக்க வேண்டும்.
சென்னை பல்கலைக் கழகத்தின் திட்டம் குறித்து...
பல்கலைக்கழக சுமையை குறைக்கும் வகையில், தகுதிவாய்ந்த கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைக்கழகம் தன்னாட்சி அங்கீகாரம் அளித்து வருகிறது. பல்கலை இணைப்பு பெற்ற அனைத்து கல்லூரிகளிலும் சி.பி.சி.எஸ்., (சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம்) அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முறையிலும் சீரிய மாற்றம் கொண்டுவர திட்டமிட்டு வருகிறோம்.
அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்புக்கு தகுதி பெறும் வகையில் சாப்ட் ஸ்கில்ஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பட்டப்படிப்புடன் தொழில்சார்ந்த படிப்பும் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் கல்விமலர் நிருபரிடம் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us