கேம்பஸ் இன்டர்வியூ: கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களும் பாதிப்பு!
கேம்பஸ் இன்டர்வியூ: கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களும் பாதிப்பு!
UPDATED : அக் 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உலக அளவில் பொருளாதார நிலையில் ஏற்பட்டு வரும் நெருக்கடி காரணமாக, ஐ.டி. நிறுவனங்களில் ஆட்குறைப்பு, புதிதாக வேலைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக் குறைப்பு போன்ற காரணங்களால் ஐ.டி. நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது.
இதனால் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டில் 1,500 மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்புக் கிடைத்தது. இந்த ஆண்டில் இதில் ஐந்தில் ஒரு பங்கு மாணவர்களுக்குக்கூட வேலைவாய்ப்பை பெற்றுத்தர முடியவில்லை என்கிறார் பாரதியார் பல்கலைக்கழக மாணவர் வேலைவாய்ப்புப் பிரிவு அதிகாரி ஜெயக்குமார்.
மதுரைக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ நடப்பது உறுதியாகாமல் உள்ளது. கடந்த ஆண்டில் மதுரை லேடி டோக் கல்லூரியில் 10 நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி 241 மாணவர்களைத் தேர்வு செய்தன. ஆனால் இந்த ஆண்டில் காக்னிசன்ட் நிறுவனம் 6 பேரை மட்டுமே தேர்வு செய்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த நிறுவனம், மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 42 கல்லூரி மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்ய இருப்பதாக விப்ரோ நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் ஆயிரம் மாணவர்களாவது முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. இந்த ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்த ஒரு சில நிறுவனங்களே வரும் என எதிர்பார்க்கிறோம் என்கிறார் தியாகராஜர் கல்லூரி முதல்வர் ராஜா கோவிந்தசாமி. மாணவர்களைத் தேர்வு செய்தால்கூட, பணியில் சேருவதற்கு ஆறு, ஏழு மாதங்கள் காத்திருக்க வேண்டியதிருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட சில மாணவர்களுக்கு, வேலையில் எப்போது சேர வேண்டும் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் வேறு வேலையிலும் சேர முடியாமல் சிக்கலில் உள்ளனர் என்கிறார் லேடி டோக் கல்லூரி மாணவர் வேலைவாய்ப்புப் பிரிவு அதிகாரி டி.ஜெ.சி., பர்னஸ்.
ஐ.டி. நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் தேக்கமடைந்துள்ள சூழ்நிலையில், மாற்றுத் துறைகளில் பணிகளைத் தேடும் நிலைக்கு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆளாகியுள்ளனர். மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப வேறுபணிகளிலும் உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து அதற்கேற்ப மாணவர்கள் தங்களைத் தகுதி படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
