கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்களை பயன்படுத்துவதால் சிக்கல்
கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்களை பயன்படுத்துவதால் சிக்கல்
UPDATED : அக் 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மாதத்தில் பெரும்பாலான நாட்கள் பள்ளி விவர சேகரிப்பு பணிகளுக்கே செலவிடுவதால், பள்ளியில் கவனம் செசலுத்த முடியவில்லை என்று ஆசிரியர்கள் புலம்புகின்றனர். தமிழக அரசாகட்டும், தேர்தல் ஆணையமாகட்டும் எந்த புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றாலும், முதலில் பள்ளி ஆசிரியர்களைத்தான் தேர்வு செய்கின்றனர். மாநிலம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிவதால், கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணிகள் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தி வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்ட இயக்கம் துவங்கிய பிறகு, ஆண்டுதோறும் பல்வேறு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. கல்வி மாவட்ட வாரியாக, வருவாய் மாவட்ட வாரியாக, ஒன்றியம் வாரியாக உள்ள பல வகையான பள்ளிகள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள், தேவைப்படும் வசதிகள், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களைப் பற்றிய முழு விவரங்கள், ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், பள்ளியில் படிக்கும் மொத்த மாணவ, மாணவிகளைப் பற்றிய விவரங்கள், இடைநிற்றல் மாணவர்களைப் பற்றிய விவரம், அப்படி இடையில் நின்று போயிருந்தால் அதற்கான சமூக, பொருளாதார காரணங்கள் என்னென்ன என்று துறையால் கேட்கப்படும் புள்ளி விவர பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்த பட்டியல் கல்வியாண்டு துவங்கும்போது ஒரு முறையும், கல்வியாண்டு முடியும்போது ஒரு முறையும் எடுக்க வேண்டும். இது மட்டுமில்லாமல், செயல் வழி கற்றல் திட்டத்தின் (ஏ.பி.எல்.,) கீழ் ஒரு குழந்தை படிக்க துவங்கியபோது, அதற்குள்ள கற்றல் திறன்கள் குறித்து மதிப்பீடு செய்து புள்ளி விவரங்களைத் தயாரிக்க வேண்டும்.
எழுத்தறிவு சதவீதம் பற்றி அறியவும் இந்த புள்ளி விவரங்கள் பயன்படுகின்றன. ஒட்டுமொத்தமாக எல்லா புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணி, ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறிப்பிட்ட பகுதிகள் ஒதுக்கி தரப்படுகின்றன. அவரவர்களுக்கு ஒதுக்கப்படும் பகுதிகளில் உள்ள வீடுகள், பள்ளிகளுக்குச் சென்று புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும்.
இதற்கு மத்தியில், குறிப்பிட்ட மாதங்களில் பாடப் பகுதிகளை நடத்தி முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம், பள்ளிகளில் நடக்கும் மாதிரித் தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வுகள் போன்றவற்றுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
எல்லாப் பணிகளையும் சிரமத்துடன் மேற்கொண்டாலும், பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைந்தால், சம்பந்தபட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட எல்லா ஆசிரியர்களும் இடமாற்றங்களை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.
இது குறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணியில் ஆண்டாண்டு காலமாக ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கற்பித்தல் பணி முதன்மையாகவும், புள்ளி விவர சேசகரிப்பு பணி இரண்டாவதாவும் இருந்தது. தற்போது, கற்பித்தல் பணியை விட புள்ளி விவர சேகரிப்பு பணியே முழுநேர கதி என்றாகிவிட்டது.
ஆசிரியைகளின் நிலை பரிதாபமாக இருக்கும். அனைவருக்கும் கல்வி திட்டம் வந்தபிறகு புள்ளி விவர சேகரிப்பு பணிபளு கணிசமாக அதிகரித்திருக்கிறது. மாதத்தில் பெரும்பாலான நாட்கள், புள்ளி விவரங்களை சேகரிப்பதிலேயே கரைந்துவிடுகிறது. இதனால், பள்ளிகளில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறோம். மாணவர்களும் ஆசிரியர்கள் இல்லாமல் தவிக்கும் சூழ்நிலை உருவாகிறது என்றனர்.
