இன்ஜி., மேனேஜ்மெண்ட்: அதிகரித்து வரும் போலி கல்விக் நிறுவனங்கள்!
இன்ஜி., மேனேஜ்மெண்ட்: அதிகரித்து வரும் போலி கல்விக் நிறுவனங்கள்!
UPDATED : நவ 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கடந்த ஆண்டு நிலவரப்படி, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.,) அங்கீகாரம் பெறாமல் இன்ஜினியரிங், மேனேஜ்மெண்ட் படிப்புகளை நடத்தும் போலிக் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை 169. இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது கவலையளிக்கும் விஷயமாகும்.
தமிழ்நாட்டில் இதுபோன்ற 15 போலி கல்வி நிறுவனங்கள் இருப்பதும் இந்தக் கல்வி நிறுவனங்கள் பல்வேறு இன்ஜினியரிங், மேனேஜ்மெண்ட் படிப்புகளை நடத்தி வருவதையும் ஏ.ஐ.சி.டி.இ., கண்டறிந்துள்ளது. நாட்டிலேயே இதுபோன்ற போலி கல்வி நிறுவனங்கள் மகாராஷ்டிரத்தில்தான் மிகவும் அதிகம். அங்கு 74 போலிக் கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இதையடுத்து மற்ற மாநிலங்கள் விவரம்:
டில்லி - 25
கர்நாடகம் - 22
தமிழ்நாடு - 15
மேற்கு வங்கம் 15
உத்தரபிரதேசம்-14
அரியானா -9
சண்டீகர் -9
ஆந்திரப்பிரதேசம் -8
இதுபோன்ற போலிக் கல்வி நிறுவனங்கள் குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி. புரந்தேஸ்வரி அண்மையில் மக்களவையில் பேசும்போது குறிப்பிட்டார்.
இந்தப் போலிக் கல்வி நிறுவனங்களில் சில, வெளிநாட்டுக் கல்வி நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தப் படிப்புகளுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் அங்கீகாரம் கிடையாது. சில கல்வி நிலையங்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தங்களது வெளியீடுகளிலும் விளம்பரங்களிலும் ஏ.ஐ.சி.டி.இ., போன்ற நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்றவை அல்ல என்பதை சிறிய எழுத்தில் வெளியிட்டுக் கொள்வதும் உண்டு.
போலிக் கல்வி நிலையங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மாநில முதல்வர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. உரிய அமைப்புகளிடம் அங்கீகாரம் பெற வேண்டும் அல்லது நடத்தி வரும் படிப்புகளை மூடி விட வேண்டும் என்று குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட போலி கல்வி நிலையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இன்ஜினியரிங், மேனேஜ்மெண்ட் படிப்புகளைப் பொறுத்தவரை, அந்தப் படிப்புகளுக்கு அங்கீகாரம் இருக்கிறதா என்பதை ஏ.ஐ.சி.டி.இ., அலுவலகத்தை அணுகி அறிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற போலிப் பல்கலைக்கழகத்தின் பட்டியலைப் பெற்று, அது குறித்து விழிப்புடன் இருக்கும்படி பத்திரிகை வாயிலாகக் கேட்டுக் கொள்வோம். அந்தப் பட்டியல் ஏ.ஐ.சி.டி.இ., இணைய தளத்திலும் இடம் பெறும் என்று ஏ.ஐ.சி.டி.இ., தென்மண்டலக் கவுன்சில் தலைவரும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான பழனிச்சாமி தெரிவித்தார்.
