தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு சிக்கல்: என்.சி.டி.இ., நோட்டீஸ்!
தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு சிக்கல்: என்.சி.டி.இ., நோட்டீஸ்!
UPDATED : நவ 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாதது, போதிய ஆசிரியர்களை நியமிக்காதது, ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகள் வேய்ந்த கட்டடங்களில் பள்ளிகளை நடத்தி வருவது போன்ற புகார்களின்படி, 50க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.,) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சர்ச்சைக்குரிய பள்ளிகளில் என்.சி.டி.இ., குழு மீண்டும் ஒரு முறை ஆய்வு நடத்திய பின், அங்கீகாரம் தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது தெரியவரும்.
தமிழகத்தில் 750க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள். ஆசிரியர் பயிற்சி இயக்குனரக அதிகாரிகள் குழு, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் ஆய்வு செய்ததில், பல பள்ளிகளில் போதிய வசதிகள் ஏற்படுத்தாததைக் கண்டுபிடித்தது.
ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகள் வேய்ந்த கட்டடங்களில் பள்ளிகளை நடத்தி வருவது, பள்ளி வளாகத்திற்குள் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தாதது, போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்காதது போன்ற குறைகளை அதிகாரிகள் குழு கண்டறிந்தது. இந்தக் குறைகளைச் சரிசெய்யக்கோரி பல முறை வலியுறுத்தியும், பள்ளி நிர்வாகங்கள் கேட்கவில்லை. இதனால், சம்பந்தபட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, தென் மண்டல என்.சி.டி.இ.,க்கு (ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில்) தமிழக அரசு பரிந்துரை செய்தது.
இதன்படி, 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு என்.சி.டி.இ., நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சம்பந்தபட்ட பள்ளிகளில் என்.சி.டி.இ., குழு மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்து, அதன்படி அந்தப் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை நீட்டிக்கச் செய்வதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து முடிவு எடுக்க உள்ளது.
பல பள்ளிகளில் தற்போது ஆய்வு நடந்து வருகிறது. ஏற்கனவே ஆய்வு முடிக்கப்பட்ட பள்ளிகளில் சில பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை நீட்டித்தும், சில பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் என்.சி.டி.இ., நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் பயிற்சி கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகையில், சில பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், நடப்பு கல்வியாண்டு முடியும் வரை அனுமதி அளிக்கப்பட்டிருக்கும். எனவே, தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எந்தவித பிரச்னையும் வராது என்று தெரிவித்தன.
அங்கீகாரம் ரத்து செய்யப்படும் பள்ளிகளில் தற்போது இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த கல்வியாண்டில், சம்பந்தபட்ட பள்ளிகள் இயங்காத நிலை ஏற்படும்போது, அவர்கள் இரண்டாம் ஆண்டு கல்வியை எந்த பள்ளியில் பெறுவார்கள் என்று தெரியவில்லை. மாணவர்கள் பாதிக்காத வகையில், அவர்களின் படிப்பு தொடர்வதற்கு உரிய நேரத்தில் என்.சி.டி.இ., வழிகாட்டுதல்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.
