5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி: மத்திய அரசு புதிய திட்டம்!
5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி: மத்திய அரசு புதிய திட்டம்!
UPDATED : நவ 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
8ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளிக் கல்வி வழங்கும் வகையில் இத்திட்டத்தின் கீழ் 5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி வீதம் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷா அபியான்) திட்டத்தினால் நல்ல பலன்கள் கிடைத்துள்ளதையடுத்து, உயர்நிலைக் கல்விப் படிப்பை முடிக்கும் வரை இத்திட்டத்தை கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் என்று பெயரிடப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக 11வது திட்டக் காலத்தில் ரூ.20,120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத்துறை உருவாக்கி வரும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு இந்த ஆண்டிலேயே அனுமதி அளித்து விட்டால், இக்கல்வியாண்டிலேயே இத்திட்டம் தொடங்கப்படும் என்று மனித வள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இத்திட்டத்திற்கான நிதியில் 75 சதவீதத்தை மத்திய அரசும் 25 சதவீதத்தை மாநில அரசும் ஏற்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களைப் பொருத்தவரை மத்திய அரசு 90 சதவீதமும் மாநில அரசுகள் 10 சதவீதமும் நிதியை அளிக்கும். தற்போதுள்ள 44 ஆயிரம் உயர்நிலைப் பள்ளிகளில் வசதிகள் மேம்படுத்தப்படும். 11 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்குவதற்கும் இத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்ட காலத்தில் நாடு முழுவதும் 2.5லட்சம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உயர்நிலைப் பள்ளிகளில் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.
ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் (ஆர்.எஸ்.எம்.ஏ.) திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கும் 5 நாள் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும மனித வள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
