UPDATED : நவ 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பத்தாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சில பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ள போதிலும்கூட, இதுபோல ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட பாடங்களில் சில பாடங்களை நீக்குவது கல்வித் தரத்தைப் பாதிக்கும் என்று சில கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
மாணவர்களுக்குத் தரமான புத்தகத்தை உருவாக்குவதன் மூலம் சி.பி.எஸ்.இ., உள்பட மற்ற கல்வி வாரியங்களுக்கு இணையாக பாடங்களை அளிக்க முடியும். இந்த நோக்கில்தான் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளிலும் மற்ற மாணவர்களுக்கு இணையாக நமது மாணவர்கள் போட்டி போட முடியும் என்று பாடப்புத்தகங்களைத் தயாரிக்கும் குழுவில் இருந்த நிபுணர்களும் ஆசிரியர்களும் கூறுகின்றனர்.
அகில இந்திய இன்ஜினியரிங் போட்டித் தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.) எழுதும் தமிழக மாணவர்களில் 98 சதவீதம் பேர் மாநில பள்ளிக் கல்வித்துறை மூலம் படித்த மாணவர்கள்தான். 2 சதவீதம் பேர்தான் சி.பி.எஸ்.இ., மாணவர்கள். ஆனால் தேர்வு முடிவுகளைப் பார்க்கும் போது, 98 சதவீத சி.பி.எஸ்.இ., மாணவர்கள் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று இடங்களைப் பிடிக்க முடிகிறது. இந்த நுழைவுத் தேர்வு எழுதிய மாநில பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 2 சதவீதம் பேர்தான் தேர்ச்சி பெற முடிகிறது.
இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்ற பள்ளிக் கல்வி நிர்வாகத்தின் விருப்பத்தின் அடிப்படையில், புதிய பாடத்திட்டத்தின்படி பாடப்புத்தகத்தை உருவாக்கினோம். பள்ளிகளில் மாணவர்கள், தங்களது அறிவுத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ள வேறு புத்தகங்களைப் படிக்கும் வழக்கம் இருப்பதில்லை. எனவே, பொதுத் தேர்வு எழுதுவதுடன், போட்டித் தேர்வு எழுதுவதற்கும் மாணவர்களைத் தயார் செய்யும் வகையில் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டன என்கிறார் ஒரு பாடக் குழு உறுப்பினர்.
தற்போதைய பாடப்புத்தகம் கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து வருகிறது. முந்தைய பாடத்திட்டப்படி படித்ததற்கும், இந்தப் பாடத்திட்டப்படி படிப்பதற்கும் மாணவர்களின் தரத்தில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என்பதையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மற்றொருபுறம், கடின பாடங்களை நீக்கிய அரசின் முடிவை வரவேற்கும் கல்வியாளர்களும் உண்டு. பாடத்திட்டம் ஓரளவு கடினமாக இருப்பதால், பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என மாணவர்களும் ஆசிரியர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இயற்பியல் பாடத்தில் காம்பவுண்ட் மைக்ராஸ்கோப் பாடத்தில் உள்ள கணக்கீடுகள் சராசரி பத்தாம் வகுப்பு மாணவனுக்கு கடினமாக இருக்கும். இதேபோல, வேதியியல், உயிரியல், கணிதப் பாடங்களில் நீக்கப்பட்ட பகுதிகளும் கடினமானவைதான். இந்தப் பாடங்கள் நீக்கப்பட்டதன் மூலம் மாணவர்கள் எளிதாகக் கூடுதல் மதிப்பெண்களைப் பெற முடியும் என்று மாநிலக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் சுப்பையாபாண்டி தெரிவித்தார்.
இந்த பாடங்களை நீக்குவது என்பது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான தற்காலிக நடவடிக்கை மட்டுமே. இதுவே நீண்டகாலத் தீர்வாகாது என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன்.
இது வரவேற்கத்தக்க நடவடிக்கைதான். ஆனால், மற்ற வகுப்புகளுக்கெல்லாம் செய்யாமல் பத்தாம் வகுப்புக்கு மட்டும் செய்திருப்பதேன். மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்றால் ஆறாம் வகுப்பிலிருந்து பாடங்களைத் திருத்தி அமைக்கலாமே. இதன் மூலம் மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க உதவும் என்கிறார் அவர்.
பாடத்திட்டம் வகுக்கப்பட்ட பிறகு, அதுகுறித்து பொது விவாதம் இருக்க வேண்டும். தற்போதைய பாடத்திட்டம் அதுபோல பகிரங்க விவாதத்திற்கு கொண்டு வரப்படவில்லை. பொது மக்களின் கருத்தைக் கேட்டறிந்து, அவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். பாடத்திட்டத்தை உருவாக்குவதில் பள்ளிகளில் பாடங்களை நடத்தும் ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகே பள்ளிகளில் இவற்றை பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் ராஜகோபாலன் யோசனை தெரிவித்தார்.
