தொலைநிலைக் கல்வி மூலம் பி.இ.,: ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி இல்லை!
தொலைநிலைக் கல்வி மூலம் பி.இ.,: ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி இல்லை!
UPDATED : நவ 30, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இத்தகவலை ஏ.ஐ.சி.டி.இ., தென்மண்டலக் கவுன்சில் தலைவரும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான எம்.எஸ். பழனிச்சாமி தெரிவித்தார்.
தொலைநிலைக் கல்வி மூலம் இன்ஜினியரிங் படிப்புகளை நடத்துவதற்கு உரிய விதிமுறைகளை உருவாக்க ஏ.ஐ.சி.டி.இ., பேராசிரியர் எஸ்.கே.கன்னா தலைமையில் நிபுணர் குழு அமைத்துள்ளது. இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தொலைநிலைக் கல்வி மூலம் இன்ஜினியரிங் படிப்புகளை நடத்துவதற்கு உரிய விதிமுறைகள் உருவாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கல்வி மலர் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு தொலைபேசி மூலம் துணைவேந்தர் பதில் அளிக்கும் நிகழ்ச்சியில், ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கல்வி மலர் இணைய தள அரங்கிலிருந்து தொலைபேசி மூலம் மாணவர்களது சந்தேகங்களுக்கு துணைவேந்தர் பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
மாணவர்களின் முக்கியக் கேள்விகளும் அதற்கு துணைவேந்தர் அளித்த பதிலும் வருமாறு:
அழகப்பா பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். எந்தப் பல்கலைக்கழகத்தில் எந்தப் பாடப்பிரிவில் எம்.பி.ஏ., படிப்பது நல்லது? கம்ப்யூட்டர் சயின்சில் நான் டிப்ளமோவும் படித்திருக்கிறேன். தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் உள்ள சில தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.இ., படிக்கலாம் என்ற விளம்பரங்களைப் பார்த்தேன். இவற்றில் சேரலாமா? (அருண்குமார், மதுரை)
எச்.ஆர்., மார்க்கெட்டிங், பைனான்ஸ், மானுபாக்ச்சரிங்..இப்படி எந்தத் துறையில் படிக்க விருப்பமோ அதற்கேற்ற துறையை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
தொலைநிலைக் கல்வி மூலம் இன்ஜினியரிங் படிப்புகளை நடத்த இதுவரை எந்தக் கல்வி நிறுவனத்திற்கும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் அளிக்கவில்லை. எந்த இன்ஜினியரிங் படிப்பாக இருந்தாலும் சரி, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், தொலைநிலைக் கல்வி கவுன்சில் அங்கீகாரம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருக்கும்போதே படிப்பை இடையிலேயே விட்டு விட்டேன். மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மூலம் நேரடி எம்.ஏ., படிப்பைப் படித்தேன். நான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை எழுத முடியுமா? (திண்டுக்கல், கண்ணன்)
நேரடி எம்.ஏ. படிப்பை முன்பு அனுமதித்தார்கள். அது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு மாறானது என்பது சுட்டிக்காட்டப்பட்டதும், தமிழக அரசு அந்த முறையை நிறுத்த ஆணை பிறப்பித்தது. அதையடுத்து தமிழகப் பல்கலைக்கழகங்களில் தொலைநிலைக் கல்வித்துறையின் மூலம் நேரடி எம்.ஏ., படிப்பில் மாணவர்கள் சேர்ப்பது நிறுத்தப்பட்டு விட்டது. பி.ஏ., படித்து, அதன்பிறகு எம்.ஏ., படிப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்புக்கு கருத்தில் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பேசிக் பிரிப்ரிடேட்ரி கோர்ஸ் படித்த பிறகு. நீங்கள் பி.ஏ., பட்டப் படிப்பில் சேரலாம்.
தொலைநிலைக் கல்வி மூலம் நேரடி எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளேன். நான் அரசு வேலைக்குச் செல்வதற்கு இந்தப் படிப்பு உதவாது என்கிறார்களே! (குமார், திருவாரூர்)
பி.ஏ., படித்து விட்டு, எம்.ஏ., படித்தவர்களைத் தான் அரசுப் பணிக்கு எடுக்கிறார்கள். ஏற்கெனவே நேரடி எம்.ஏ., படிப்பில் சேர்ந்து படித்ததால் அரசு வேலைவாய்ப்புகளில் சேர முடியாமல் இருப்பது குறித்த உங்கள் நிலையை விளக்கி அரசின் உயர்கல்வித்துறைக்குத் தெரிவிக்கலாம். இதன்மூலம், உங்களைப் போன்ற மாணவர்களின் கோரிக்கையை அரசு ஆராய்ந்து முடிவெடுக்க வழி ஏற்படும்.
தொலைநிலைக் கல்வி மூலம் எம்.பில்., பிஎச்.டி., படிக்க முடியுமா? (ஸ்ரீராம், ஊட்டி)
தொலைநிலைக் கல்வி மூலம் எம்.பில்., பிஎச்.டி., படிப்புகளை நடத்தக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள எந்த பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் மூலமும் எம்.பில்., பிஎச்.டி. படிக்க முடியாது. பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பகுதி நேர பிஎச்.டி., படிக்க வாய்ப்புகள் உள்ளன.
நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., படித்து தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது புரவிஷனல் சான்றிதழ் இதுவரை கிடைக்கவில்லை. நான் எம்.ஏ. சேர வேண்டும் என்ன செய்வது? (கருப்பையா, சென்னை)
முதுநிலைப் பட்டப் படிப்பில் சேர வேண்டுமானால் புரவிஷனல் சான்றிதழ் அல்லது பட்டச்சான்றிதழ் அவசியம் தேவை. புரவிஷனல் சான்றிதழ் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்றால், இதுகுறித்து பல்கலைக்கழகத்தில் உயர் அதிகாரிகளைச் சந்தித்து முறையீடு செய்யலாம்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கவுன்சலிங் அண்ட் சைக்கோதெரபி படித்து விட்டு லேட்டரல் என்ட்ரி மூலம் அதே பாடப்பிரிவில் எம்.எஸ்சி., படிக்கிறேன். எனக்கு மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே! இந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு எப்படி?(ப்ரியா, கோவை)
எம்.எஸ்சி. கவுன்சலிங் அண்ட் சைக்கோ தெரபி மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி அதிகம் இருப்பதால் அந்தப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கூடுதல் சேவைக் கட்டணம் கோரின. அதனால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் லேட்டரல் என்டரி மூலம் இந்த ஆண்டு சேர்ந்திருப்பதால் உங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் குறைவாகக் கட்டணம் இருந்ததால் எம்.எஸ்சி.,யில் முதல் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதனால்தான் இந்த வேறுபாடு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
கவுன்சிலிங் அண்ட் சைக்கோ தெரபி படிப்பிற்கு நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் பயிற்சிக்குப் பிறகு, கவுன்சலிங் ஆலோசகராகக்கூட பணியாற்றலாம். பள்ளிகளில் மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்க ஆலோசகர்களை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோன்ற நிலையில் அந்த வேலைவாய்ப்புகளுக்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
நான் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதையடுத்து தொலைநிலைக் கல்வி மூலம் பி.ஏ., வரலாறு படித்தேன். தொலைநிலைக் கல்வி படிப்புக்கு வேலை கிடைக்குமா? (மோகன், புதுச்சேரி)
பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் தொலைநிலைக் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற தொலைநிலைக் கல்விப் படிப்புகள் அங்கீகாரம் பெற்றவைதான். அந்தப் படிப்பைக் கொண்டு வேலைக்குச் சேரலாம். உயர்கல்வியும் படிக்கலாம். இதனை தமிழக அரசு ஆணை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. தொலைநிலைக் கல்வி மூலம் பட்டம் பெற்றவர்கள், கல்லூரிகளில் சேர்ந்து முதுநிலைப் படிப்பைப் படிக்கலாம். கல்லூரிகளில் படித்த மாணவர்கள், திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பைப் படிக்கலாம்.
பிளஸ்2 தேர்ச்சி பெறவில்லை. திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கிலம் படிக்க முடியுமா? (பிரதீப்குமார், கோவை)
18 வயது ஆன யாரும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்ட படிப்பில் சேரலாம். அதற்கு முன்னதாக பேசிக் பிரிப்பரேட்டரி கோர்சும் படிக்க வேண்டும்.
நான் செகண்டரி கிரேடு ஆசிரியராக பணிபுரிகிறேன். பி.லிட்., தமிழ் பண்டிட் படிப்பு பி.எட்., படிப்புக்கு சமமமா? (வரதராஜன், கத்திவாக்கம்)
பி.லிட்., தமிழ் பண்டிட் படிப்பு பி.எட்., படிப்புக்குச் சமமில்லை. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) அங்கீகாரம் இருந்தால்தான் கல்வி சம்பந்தமான படிப்புகள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.
நான் எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிக்கிறேன். தொலைநிலைக் கல்வி மூலம் எம்.பில்., பி.எட்., படிக்க முடியுமா? (முத்துக்குமார், மதுரை)தொலைநிலைக் கல்வி மூலம் எம்.பில்., படிக்க முடியாது. கல்லூரிகளில் சேர்ந்து இப்படிப்பைப் படிக்கலாம். இரண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்று தற்போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராக இருப்பவர்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிக்கச் சேர முடியும்.
தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கும் எம்.பி.ஏ., படிப்புக்கு மதிப்பு இல்லை என்கிறார்களே. உண்மையா? (சசிரேகா, கோபாலபுரம், சென்னை)
பல்கலைக்கழக மானியக் குழு, தொலைநிலைக் கல்விக் கவுன்சில்
அங்கீகாரத்துடன் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைநிலைக் கல்வி வேலைவாய்ப்புக்கும் உயர்கல்வி படிக்கவும் உகந்ததுதான். கல்லூரிகளில் படிக்கும் படிப்புகளுக்கு நிகராகவே இதுவும் கருதப்படுகிறது.
நான் மின்வாரியத்தில் பணிபுரிகிறேன். ராஜஸ்தான் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி மூலம் நடத்தும் பி.டெக்., படிப்பில் சேர்ந்துள்ளேன். அந்தப் படிப்புக்கு அங்கீகாரம் இருக்கிறதா? (மல்லிகா சென்னை). தமிழகத்தில் ஒரு தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.இ., படிப்பில் சேர்ந்துள்ளேன். அது அங்கீகாரம் பெற்றுள்ளதா? (கிருஷ்ணா, சென்னை)
எந்த ஒரு தொலைநிலை இன்ஜினியரிங் படிப்பிற்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் இருக்க வேண்டும். எந்த பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இன்ஜினியரிங் படிப்புகளுக்கும் இதுவரை ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். எந்த கல்வி நிறுவனமும், எந்த இன்ஜினியரிங் படிப்பும் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை ஏ.ஐ.சி.டி.இ.-யை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
நான் பிளஸ்2 படிக்காமல், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் பி.ஏ., படித்துள்ளேன். பி.எட்., படிக்க முடியுமா? (சஞ்சீவி, கள்ளக்குறிச்சி)
பிளஸ்2 படித்து விட்டு பி.ஏ., படித்து விட்டு பி.எட்., படிப்பதைத்தான் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்றுக் கொள்கிறது. அந்த விதிமுறைகளையே தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் பின்பற்றுகிறது.
பி.எஸ்சி., விலங்கியல் பட்டப்படிப்பு முடித்து விட்டு மூன்று ஆண்டுகளாகிறது. தொலைநிலைக் கல்வி மூலம் எம்.எஸ்சி., படிக்கலாமா? அல்லது பி.எட்., படிக்கலாமா? (மகேஸ்வரி, திருப்பூர்)
தொலைநிலைக் கல்வி மூலம் எம்.எஸ்சி., படிக்கலாம். தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட்., படிக்க இரண்டு ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் தேவை என்பதால், கல்வியியல் கல்லூரியில் நேரடியாகச் சேர்ந்து பி.எட்., படிக்கலாம்.
