இலக்குடன் அணுகினால் வெற்றி: மாணவர்களுக்கு இறையன்பு அறிவுரை!
இலக்குடன் அணுகினால் வெற்றி: மாணவர்களுக்கு இறையன்பு அறிவுரை!
UPDATED : டிச 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தினமலர் சார்பில் பத்தாம் வகுப்பு மெட்ரிக் மாணவர்கள் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது குறித்து விளக்கும் ஜெயித்துக் காட்டுவோம் கல்வி நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. காலையில் நடந்த மாணவிகளுக்கான நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு பேசியதாவது:
இன்று நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு உங்கள் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் தேர்வுக்காக உங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளவும் வந்துள்ளீர்கள்.
ஒருவர் தனது பள்ளி இறுதித் தேர்வை எழுதிக் கொண்டிருந்தார் அவர் வாழ்ந்த ரஷ்யாவில் அப்போது ஜார்ஜ் மன்னர், புரட்சியில் ஈடுபட்ட இளைஞர்களை தண்டித்துக் கொண்டிருந்தார். அதில் அந்த மாணவனின் சகோதரர் பெயரும் இருந்தது. தேர்வு எழுதும் தினத்தன்று அவரது சகோதரருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதை அறிந்திருந்தும் அந்த மாணவன், கணக்குத் தேர்வை எழுதி, அதில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களையும் பெற்றார். அவர் வேறு யாருமல்ல. ரஷ்ய விடுதலைக்காகப் பாடுபட்ட லெனின். அவரது சகோதரருக்கு தூக்கு என்று தெரிந்திருந்தும் அவரது மன தைரியம் தேர்வில் வெற்றி பெற உதவியது. நாமும் தேர்வு என்றால் பரபரப்புடன் அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்கான மனோதைரியத்தைக் கொண்டிருந்தாலும் பள்ளியும் தேர்வும் அவர்களை சோர்வடையச் செய்து விடுகிறது.
தேர்வு என்பதை எளிமையானதாக மாற்றிக் கொள்ளுங்கள். தேர்வுக்கு இன்னமும் மூன்று மாதங்கள் உள்ளன. நீங்கள் ஒரு அட்டவணையை தயாரித்துக் கொள்ளுங்கள். அந்த அட்டவணையின்படி உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
கூட்டமாக மான்கள் இருந்தாலும் சிங்கம் தான் இலக்காகக் கொண்ட மானை மட்டும்தான் குறிபார்த்து தாக்கிப் பிடிக்கும். அந்த மனநிலை, தேர்வில் மாணவர்களுக்கு வர வேண்டும். சரியான இலக்குடன், ரிலாக்சாடாக தேர்வை அணுக வேண்டும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்கக்கூடாது. உங்களுக்கு மனஉறுதி இருக்க வேண்டும். தேர்வு என்பது ஒரு கொண்டாட்டமாக இருக்க வேண்டும். ஆனால், இன்று தேர்வு என்றால் மாணவர்களுடைய மகிழ்ச்சி, சிரிப்பு இவையெல்லாம் போய் விடுகிறது.
சில நேரங்களில் தேர்வு சமயத்தில் பெற்றோர், தேர்வை வைத்துக் கொண்டு சிரிக்கிறாயா? என்று கேட்பார்கள். இன்முகம் மற்றும் சிரிப்புடன் வாழ்க்கையை எதிர்கொள்பவர்கள்தான் வெற்றி பெறுவர். படிப்பினை அனுபவித்துப் படியுங்கள். அப்போது உங்களது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
தேர்வுக்கான படிப்பினை, எளிமையாக்கிக் கொண்டு, புத்தகங்களை படியுங்கள். பாடங்கள் அனைத்தையும் விருப்பத்துடன் படியுங்கள். அப்படிப் படிக்கும்போது நம் எண்ணத்தைவிட்டு அகலாது.
மூன்று மணி நேரம் தொடர்ந்து படித்த பின், ஓய்வெடுங்கள். அப்போது மனதுக்கு இனிமையான பீத்தோவன் போன்றவர்களின் இசையை மெல்லிதாகக் கேளுங்கள். இது, உங்களின் கவனத்தையும் இலக்கையும் அதேநேரத்தில் ஞாபகசக்தியையும் அதிகரிக்கும். படிக்கும் பாடங்கள் அனைத்தையும் மனதிற்குள் பதிய வைக்க முடியும். தேர்வுக்கு முதல் நாள் ஓய்வெடுக்கும் நாள்.
அன்று, மெல்லிய நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். படித்ததை நினைவில் கொண்டு வந்து எண்ணிப் பார்க்க வேண்டும். அத்துடன் சீக்கிரமாகத் தூங்குவது நல்லது.
தேர்வில் வெற்றி பெற நாளை முதல் காலை எழுந்தவுடன், தேர்வு அறைக்குள் சென்று, வினாத்தாளை பெற்று, அதில் எளிமையான வினாக்கள் கேட்கப்பட்டு, சரியாக எழுதி முடித்து, மகிழ்ச்சியுடன் வெளிவருவது போன்ற காட்சியை மனதில் எண்ணிப் பாருங்கள்.
இதுபோன்று செய்யும் போது, தேர்வுபயம் போய் விடுவதுடன், மனஉறுதியும் உண்டாகும். இரவு படுக்கும்போது நான் எல்லாவற்றையும் படித்து விட்டேன். தேர்வுக்கு தயாராகிவிட்டேன் என்று எண்ணிப் பாருங்கள்.
அனைத்துக் கணக்கு சூத்திரங்கள், தாவரவியல், விலங்கியல் பெயர்கள், மனப்பாடப் பகுதிகள், ஆண்டு நிகழ்வுகள் என அனைத்தையும் சேர்த்து எழுதி வைத்து தினசரி 30 நிமிடங்கள் ஒதுக்கி மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். இவ்வாறு படித்தால் எதுவும் மறந்து போகாது.
அத்துடன் ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள் மற்றும் மோர் இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் கலந்த உணவை சாப்பிடக்கூடாது.
ஓய்வு கொடுத்து, இனிய இசையைக் கேட்டு, படித்து, தேர்வில் வெற்றி பெற்று மகிழ்ச்சியோடு இருங்கள். இவ்வாறு இறையன்பு பேசினார்.
