UPDATED : ஜூன் 29, 2009 12:00 AM
ADDED : ஜூன் 29, 2009 01:06 PM
மாநகர உயர் மருத்துவர்கள் சங்கத்தின் (சிட்டி பிசிசியன்ஸ் அசோசியேசன்) 11வது ஆண்டு விழாவை ஒட்டி, அனுபவம் மிக்க மருத்துவர்களின், மறக்கமுடியாத சிகிச்சை அனுபவங்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடந்தது. சென்னை, முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடந்த இக்கருத்தரங்கில் இதயம், நரம்பியல், சிறுநீரகவியல் உள்ளிட்ட மருத்துவத் துறைகளில் அனுபவம் மிக்க நிபுணர்கள் தங்கள் சிகிச்சை அனுபவத்தை இளம் மருத்துவர்கள் மற்றும் தங்கள் மருத்துவ சகாக்களிடம் பகிர்ந்து கொண்டனர். இந்த கருத்தரங்க துவக்க விழாவில், மருத்துவத் துறையில் சாதனை புரிந்த டாக்டர்கள் சிவக்குமார், நரசிங்கம் மற்றும் சேஷாத்ரி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. விருதுகளை அடையாறு வி.எச்.எஸ்., தலைவர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீநிவாஸ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது வரும் இளம் டாக்டர்களுக்கு சில முக்கிய குணங்கள் அவசியம். இந்த குணங்களை கொண்டவர்கள் தான் சாதிக்க முடியும். உடலில் எந்த நோயும் இல்லாத ஆரோக்கியமான உடல்நிலை, அதிர்ஷ்டம், கடின உழைப்பு, தெளிவான மனநிலை ஆகியவை அவசியம். நோயாளிகளை அணுகும் போது மன அழுத்தத்துடனோ, வேறு சிந்தனையுடனோ இருக்கக் கூடாது. அவர்களை முழுமையாக பரிசோதித்து, நோயை நீக்க வேண்டும். ஒருமுறை எழுதிக் கொடுத்த மருந்தை எக்காரணத்தை கொண்டும், திருத்தும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. முதுகலை படிக்கும் மருத்துவ மாணவர்கள் தாங்கள் என்ன துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். கிடைப்பதை படிப்போம் என்று நினைக்கக் கூடாது என்றார் .இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீநிவாஸ் பேசினார். விழாவில், மாநகர உயர் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ராஜன் பேசுகையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தவே இந்த சங்கம் துவக்கப்பட்டது. இந்த சங்கத்தின் மூலம் மாதம் தோறும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒன்று கூடி விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன என்றார். விழாவில், டாக்டர்கள் முல்லசேரி அஜித், ராஜன், உல்லாஸ் பாண்டுரங்கி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.