UPDATED : ஜூன் 29, 2009 12:00 AM
ADDED : ஜூன் 29, 2009 02:13 PM
ஆன்லைன் வசதிகளைப் பெருக்குவதுடன், தனியாருடன் கைகோர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வேலையில்லாதோர்க்கு வேலைவாய்ப்பை ஏற்படுத் தித்தர, 1959ம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர நாடு முழுவதும் வேலைவாய்ப் பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் 965 வேலைவாய்ப்பகங்கள் உள்ளன. வேலைவாய்ப்பகங்களுக்கான செலவில், 25 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கிறது; மீத சதவீத தொகையை மாநில அரசு ஏற்கிறது. அரசுத் துறைகளில் காலி யிடங்கள் வந்தால், இதற்குத் தகவல் அனுப்பி, வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவர். அதுபோல, தனியாரும் தகவல் அளித்து வேலைக்கு ஆட்களை இவர்கள் மூலம் தான் நியமித்துக்கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், 1996ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவைப் பிறப்பித் தது. வேலைக்கு ஆட்களை நியமிக்க வெளியிலிருந்தும் முயற்சிக் கலாம் என்று கூறியதை அடுத்து, தனியார் மட்டுமின்றி, அரசுத் துறைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்க, தேர்வுகள் நடத்தப்பட்டன. இப்படி வேலைவாய்ப்புக்குப் போட்டி அதிகமானதால், வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்தோருக்கு வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாகி விட்டது. கடந்த ஆண்டு இறுதியில் எடுத்த கணக்குப்படி, வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை மூன்று கோடியே 90 லட்சம் பேர். இதில், இதுவரை ஐந்து லட்சத்து 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வந்தன; அவற்றில், தகுதியான நபர்கள் தேர்வு பெற்று, மூன்று லட்சத்து ஐந்தாயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். வேலைவாய்ப்பகங்களை நம்பி வேலையில் சேர முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. அதனால், பலரும் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்ததையே புதுப்பிக்கக்கூட விரும்பவில்லை. இந்த நிலையில், வேலைவாய்ப்பகங்களை காலத்திற்கு ஏற்ப நவீன மாற்றங்களுடன் புத்துயிர் அளிக்கலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பகங்களில் உள்ள நடைமுறை விதிகளை மாற்றவும், தனியாருடன் கைகோர்க்க வைத்து ஆன்லைன் மூலமும் சேவை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட தொழில் பயிற்சி அளிக்க நாடு முழுவதும் 1,890 பயிற்சி மையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆன்லைனில் அளிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் வாய்ப்புகளை அதிகப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், நாக்ரி டாட் காம், மோன்ஸ்டார் போன்ற தனியார் ஆன்லைன் வேலைவாய்ப்பு தரும் மையங்களின் ஒத்துழைப்பைப் பெற்று, ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பகங்கள் செயல்படவும் அரசு பரிசீலித்து வருகிறது.