UPDATED : ஜூலை 01, 2009 12:00 AM
ADDED : ஜூலை 01, 2009 01:33 PM
துப்பட்டா உடன் கூடிய சுடிதார், சல்வார் கமீஸ் அணிய அனுமதிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
சென்னை போரூரில் உள்ள வெங்கடேஸ்வரா ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவி கமலம் ஐகோட்டில் தாக்கல் செய்த மனு: பி.எச்.எம்.எஸ்., படிப்பு முடித்து ஓராண்டு பயிற்சியில் சேர்ந்துள்ளேன். கல்லூரிக்கு சேலை அணிந்து வர வேண்டும் என ஊழியர்கள் தெரிவித்தனர். நான் உட்பட சிலருக்கு சேலை அணியும் பழக்கம் இல்லை. எனவே, கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளரிடம் இப்பிரச்சினையைக் கொண்டு சென்றோம். எங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.
பின், சேலை அணிந்து வருமாறு கல்லூரியின் தாளாளர் என்னிடம் கூறினார். கல்லூரியின் விளக்கக் குறிப்பேட்டில், உடை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்தேன். பின், எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தேன். சேலை அணியவில்லை என்றால் டி.சி., கொடுக்கப்படும் என்று நிர்வாகம் எச்சரித்தது.
சுடிதார், சல்வார், சேலையை மாணவிகள் அணியலாம் என யு.ஜி.சி.,யும் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகமும் தெரிவித்துள்ளன. எனவே, சேலை அணிந்து வர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். துப்பட்டா உடன் சல்வார் கமீஸ், சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வெங்கடேஸ்வரா ஓமியோபதி மருத்துவக் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: எங்கள் கல்லூரி துவங்கப்பட்ட நாள் முதல், பயிற்சி பெறுபவர்கள் மாணவிகளாக இருந்தால் சேலையும் மாணவர்களாக இருந்தால் பேண்ட், சட்டையும் அணிய வேண்டும் என விதி வகுத்துள்ளோம். பயிற்சி பெறுபவர்கள் மத்தியில் ஓழுக்கம், கண்ணியத்தைப் பேணுவதற்காகத்தான் ஆடை நெறிமுறைகளை வகுத்துள்ளோம். மனுதாரருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியாது.
எங்கள் கல்லூரி வகுத்த ஆடை நெறிமுறைகளை விதிகளை மனுதாரர் பின்பற்ற வேண்டும். அவர் விரும்பினால் வேறு எந்தக் கல்லூரியிலும் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். மாணவி, சார்பில் வக்கீல் அருள்மொழி வாதாடினார்.
நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவு: துப்பட்டா உடன் சல்வார் கமீஸ், சுடிதார் ஆடைகளை அநாகரிகமான உடைகள் என கருத முடியாது. இந்த ஆடை, உடல் முழுவதையும் மறைக்கிறது. இதை கல்லூரியில் அனுமதிக்க முடியாது எனக்கூற முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாடு எதுவும் விதிகளில் நிர்ணயிக்கப்படவில்லை.
அவ்வாறு விதிமுறைகள் இல்லாதபோது, சேலை மட்டுமே அணிய வேண்டும். சல்வார் கமீஸ் மற்றும் சுடிதார் அணியக் கூடாது என மனுதாரரை, கல்லூரி நிர்வாகம் வற்புறுத்த முடியாது. இந்தப் பிரச்சினையை கல்லூரி நிர்வாகமும் மாணவியும் சுமுகமாக தீர்திருக்க வேண்டும்.
ஆனால் வக்கீல் நோட்டீஸ், தேசிய மகளிர் கமிஷனுக்கு மனு கோர்ட்டில் வழக்கு என வந்து விட்டது. சேலை மட்டுமே அணிய வேண்டும் என மனுதாரரை வற்புறுத்தக்கூடாது. துப்பட்டா உடன் கூடிய சல்வார் கமீஸ் மற்றும் சுடிதார் அணிந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள மாணவியை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.