பெரிதாக சாதிக்க முடியும்: மயில்சாமி அண்ணாதுரை உறுதி
பெரிதாக சாதிக்க முடியும்: மயில்சாமி அண்ணாதுரை உறுதி
UPDATED : ஆக 10, 2009 12:00 AM
ADDED : ஆக 10, 2009 12:42 PM
திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பெரிதாக கனவு காணுங்கள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரும், பெற்றோரும் கலந்துகொண்டனர். இதில் சந்திரயான்1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், சிறிது சிறிதாக செய்தாலும் பெரிதாக சாதிக்க முடியும். நான் சிறுவயதில் படிக்கும் போது, கிராமத்தில் இருந்து இரண்டு கி.மீ., தூரத்தில் உள்ள சிறிய மாட்டுக்கொட்டகையில் தான் வகுப்பு நடக்கும். அன்று தெரு விளக்குகள் கிடையாது. இவ்வாறு சிரமப்பட்டு சிறிது சிறிதாக படித்து தான் முன்னேறினேன். அதேபோல் மிகச் சிறிய அளவில் சந்திரயான் திட்டம் துவக்கப்பட்டு பெரிதாக சாதிக்க முடிந்தது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். அம்மா, தன் பிள்ளையை தான் பள்ளிக்கு அனுப்புவார். ஆனால், பள்ளியிலோ பலரது பிள்ளைகளுக்கு ஆசிரியர் கல்வி அளிப்பார். மாணவர்கள் உயர்ந்த நிலைக்குச் சென்றாலும், ஆசிரியர் அங்கு தான் பழையபடி கல்வி அளித்துக்கொண்டே இருப்பார். ஆசிரியர் பணி மகத்தானது. ஆசிரியர் பதவிக்குச் சென்றாலும் சாதிக்க முடியும். உலகில் 60 சதவீத நோபல் பரிசு வென்றவர்கள் ஆசிரியப் பணியில் இருந்தவர்கள் தான். மாணவர்கள் வகுப்பில் கவனத்துடன் கல்வி கற்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசுகையில், சந்திரயான் திட்டம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது தான். இதன் அடுத்த திட்டத்தில் சந்திரயான்2 நிலவில் இறங்கும். அதிலிருந்து வேறொரு ராக்கெட் வெளியேறி நிலவில் கல், மணல் ஆகியவற்றை சேகரிக்கும். மேலும், நிலவில் தாதுப்பொருள் குறித்து ஆய்வு செய்து தகவல்களை தெரிவிக்கும் வகையில் செயல்படும் என்று, பலத்த கைத்தட்டல்களுக்கிடையே தெரிவித்தார். நிகழ்ச்சியில், பள்ளி தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார். பள்ளி தாளாளர் விஷ்ணுசரண் தலைமை தாங்கினார். முதல்வர் தணிகாசலம் நன்றி கூறினார்.
