UPDATED : ஆக 10, 2009 12:00 AM
ADDED : ஆக 10, 2009 12:48 PM
ஏற்கெனவே, அதிகமான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இருப்பதை கருத்தில் கொண்டும், ஆசிரியர் கல்வி படித்தவர்களுக்கு தற்போது நிலவும் குறைந்தளவு வேலை வாய்ப்பு நிலையை கருத்தில் கொண்டும், இந்த தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 730 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 600ஐ தாண்டுகிறது. இது மட்டுமில்லாமல், பி.எட்., கல்வி நிறுவனங்களும் அதிகளவில் இயங்கி வருகின்றன. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் மட்டும் ஆண்டுக்கு 40 ஆயிரம் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். ஆனால், அதற்கேற்ப வேலை வாய்ப்புகள் இல்லை. கடந்த கால ஆட்சியில் ஆசிரியர் பணிக்கு அதிகளவில் தேர்வு செய்யப்படாத நிலையில், இந்த ஆட்சியில் தான் கணிசமான அளவிற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், ஆசிரியர் பயிற்சி முடித்து, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 13 மாநிலங்களில் புதிதாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை துவங்க தற்காலிக தடை விதித்து என்.சி. டி.இ., அறிவித்துள்ளது. இதுகுறித்து, என்.சி. டி.இ., இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அதிகரித்து வரும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், வரும் கல்வியாண்டில் (2010 2011) இருந்து, அரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் பி.எட்., டி.எட்., உள்ளிட்ட அனைத்து வகையான ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளுக்காக, புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை துவங்க தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. சம்பந்தபட்ட மாநில அரசுகளும், புதிய பள்ளிகளை துவக்குவதை அனுமதிக்கக் கூடாது. இந்த விதிமுறை, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. மேற்கண்ட மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் இருந்து புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை துவங்க, சம்பந்தப்பட்ட மண்டல என்.சி.டி.இ., அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப் பிக்கலாம். செப்டம்பர் முதல் தேதியில் இருந்து, அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
