பருத்திக்கு மொக்கு போடும் பரிதாபம்: வாடும் குழந்தை தொழிலாளர்கள்
பருத்திக்கு மொக்கு போடும் பரிதாபம்: வாடும் குழந்தை தொழிலாளர்கள்
UPDATED : அக் 06, 2009 12:00 AM
ADDED : அக் 06, 2009 03:55 PM
குழந்தை தொழில் முறையை தடுக்கும் நோக்கத்துடன், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலையில் ஈடுபடுத்துவதை அரசு தடை செய்துள்ளது. குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி வேலை வாங்கும் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கையும் எடுத்து வருகிறது. குழந்தை தொழிலாளரை கண்டறியும், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும், அரசு துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்துவது வழக்கம். மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி அளிக்க, தனியாக பள்ளிகளும் உள்ளன.
அரசின் இவ்வளவு நடவடிக்கைகளையும் தாண்டி, குழந்தை தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவோரும் உள்ளனர். குறைந்த சம்பளத்தில் அதிக வேலை வாங்க முடியும் என்பதே அதற்கு முக்கிய காரணம்.தலைவாசல், வீரகனூர், நரசிங்கபுரம், பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி பகுதியில் உள்ள பருத்தி தோட்டங்களில், இத்தகைய குழந்தை தொழிலாளர்கள் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இங்கு வீரிய ஒட்டு ரக பருத்தி பயிர் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஆண், பெண் என இருவேறு செடிகள் தனித்தனியாக பயிரிடப்படுகிறது. இந்த பருத்தி செடிகள் நடவு செய்த 45வது நாளிலிருந்து 120வது நாள் வரை சப்பை பிடித்து பூ பூக்கும்.ஆண் பருத்தி செடியில் பூக்கின்ற பூக்களை பறித்து, அவற்றை பெண் பருத்தி பூவில் மகர்ந்த சேர்க்கை (மொக்கு போடுதல்) செய்யும் வேலை 90 நாள் வரை இருக்கும்.
சிறியளவில் இருக்கும் பருத்தி செடிகளில் மொக்கு போடும் வேலைக்கு பெரும்பாலும் சிறுவர்களையே பயன்படுத்துகின்றனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் காரணமாக தொழிலாளர் வேலைக்கு வராததும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
மொக்கு போடும் கூலி வேலைக்கு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், நெய்வேலி, பெரம்பலூர், திட்டக்குடி, கருமந்துறை, கல்வராயன் மலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாள் ஒன்றுக்கு 70 ரூபாய் அடிப்படையில் கூலித்தொழிலாளர் அழைத்து வரப்படுகின்றனர். மொக்கு போடும் வேலைக்கு 15 வயதுக்கு குறைவாக இருக்கும் சிறுவர், சிறுமியர்கள் புரோக்கர் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
ஏக்கருக்கு 12 பேர் வீதம் 90 நாட்கள் நாள்தோறும் காலை நேரத்தில் மொக்கு போடுதலும், மாலையில் ஆண் பூ சேகரித்தல் வேலையும் செய்கின்றனர். தற்போது ஆத்தூர், தலைவாசல் பகுதியில் மொக்கு போடும் வேலையை துவங்கியுள்ளனர்.கடந்த சில ஆண்டுக்கு முன் இந்த வேலைக்கு வந்த சிறுமியர், இளம்பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியதாகவும் புகார் எழுந்தது.
இவ்வாறு வேலைக்கு வரும் சிறுவர், சிறுமியரை கொத்தடிமை போன்று நடத்தும் சம்பவங்களையும் நேரில் காண முடிகிறது. இது குறித்து பா.ஜ., மாவட்ட விவசாய அணி செயலாளர் பெரியசாமி கூறுகையில், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தற்போது விளைநிலத்தில் மொக்கு போடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் கல்வராயன் மலைவாழ் பகுதி சிறுவர்களே அதிகளவில் அழைத்து வரப்படுகின்றனர். அவ்வாறு அழைத்து வந்துள்ள சிறுவர்களை மீட்டு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இத்தகைய பிரச்னையை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு, பருத்திக்கு மொக்கு போடும் வேலையில் சிறுவர், சிறுமியரை பயன்படுத்துவதை கண்டறிந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு வேலை வாங்குவோர், சிறுவர்களை அழைத்து வரும் புரோக்கர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
