தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் :மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் :மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
UPDATED : அக் 11, 2009 12:00 AM
ADDED : அக் 11, 2009 08:54 AM
அதிக மதிப்பெண்கள் பெற வழிகாட்டும் இந்நிகழ்ச்சியில் காலை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.
அறிவியல் ஜி.மருதமுத்து, மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளி, மதுரை:
அறிவியலில் 2, 7, 13ம் பாடங்களில் ஒரு மதிப்பெண் வினாக்கள் அதிகம் கேட்பதால் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இருமதிப்பெண் வினாக்களில் முழுமையாக பெற 2, 3, 7, 8, 9, 11, 13 பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். வேதியியலில் 6, 8, 9, 18ம் பாடங்களில் வினாக்களை திரும்ப திரும்ப எழுதிப் பார்க்க வேண்டும். உயிரியிலில் ஆசிரியர் சொல்லித் தராமலேயே நாமாக படிக்கும் பகுதிகள் (14, 15ம் பாடங்கள்) உள்ளன. வேதியியலில் 3 பாடங்கள், உயிரியலில் 2 பாடங்கள், இயற்பியலில் 1, 3, 5ம் பாடங்களை நன்கு படிக்க வேண்டும்.
ஆங்கிலம் எஸ்.ஜோதிமதி, அரசு உயர்நிலைப் பள்ளி, எஸ்.புளியங்குளம்:
ஆங்கிலம் மிக கடினமான பாடம் என ஒதுக்குகின்றனர். இக்கருத்தை மாற்ற வேண்டும். ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெற வழியுள்ளது என புரிந்து கொள்ள வேண்டும். கட்டுரை வினாக்களை அறிமுகம் முதல் முடிவுரை வரை பக்கத் தலைப்பிட்டு எழுதினால் அதிக மதிப்பெண் கிடைக்கும். செய்யுள்கள் மூன்றையும் நன்கு படித்தே ஆக வேண்டும்.
கணிதம் எஸ்.கிறிஸ்டோபர் ஜெயசீலன், அரசு உயர்நிலைப் பள்ளி, அவனியாபுரம்:
கணிதப் பாடத்தை தினமும் எழுதிப் பார்த்தவர்கள் நூற்றுக்கு நூறு எடுக்காமல் இருந்ததில்லை. தினமும் பார்க்கும் கண்ணாடி, ஜன்னல் பகுதிகளில் சூத்திரங்களை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை திரும்ப, திரும்பச் சொல்லி பார்க்க வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும் அடிப்பகுதியில் கோடிட்டு ரப் ஒர்க்கை செய்து பார்க்க வேண்டும். ஐந்து மதிப்பெண் வினாக்களை பக்கத்தின் முதலில் துவங்கி, அதே பக்கத்தில் அடிப்பகுதியில் முடிக்க வேண்டும். தேற்றங்களை எழுதிப் பார்த்து ஆசிரியரிடம் காண்பித்து சரிசெய்து கொள்ளலாம்.
சமூக அறிவியல் மாலதி, ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி, மதுரை:
ஒரு மதிப்பெண் வினாக்களை விடைத்தாளில் எழுதும்போது, ஒவ்வொரு பக்கத்திலும் 1 முதல் 10, 11 முதல் 20, 21 முதல் 30 என எழுதினால் நல்லது. சமூக அறிவியல் எளிது என நினைத்து பலர் எளிமையான வினாக்களில் தவறு செய்கின்றனர். வரலாறு பாடத்தில் மேப்பில் குறிக்கும்போது முதலில் பென்சிலால் எழுதி சரிபார்த்த பின்னர் வண்ணம் தீட்டலாம். பென்சிலால் எழுதும்போது தவறாதை எளிதில் சரிசெய்ய முடியும். குடிமையியலில் மத்திய, மாநில அரசுகளை ஒப்பிட்டு படிக்க வேண்டும். புவியியலில் இந்தியா, தீபகற்பகம், இந்திய அமைவிடம் போன்றவற்றில் வினாக்களின் வேறுபாட்டை அறிந்து பதில் தரவேண்டும்.
