வெற்றி, தோல்வியை சரிசமமாக கருத வேண்டும்: ஸ்டாலின் அறிவுரை
வெற்றி, தோல்வியை சரிசமமாக கருத வேண்டும்: ஸ்டாலின் அறிவுரை
UPDATED : அக் 12, 2009 12:00 AM
ADDED : அக் 12, 2009 11:56 AM
தி.மு.க., இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு, மாநில அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னை வண்ணாரப் பேட்டை தியாகராயர் கல்லூரியில் நேற்று நடந்தது.
கட்டுரையில் விருதுநகர் வித்யா, மதுரை புறநகர் திலகா, சேலம் ஸ்வர்ணா, கவிதையில் திண்டுக்கல் கார்த்திகாதேவி, மதுரை மாநகர் கபிலா, வடசென்னை ஜாய், பேச்சுப் போட்டியில் திருவள்ளூர் குறிஞ்சி கொற்றவன், வேலூர் பொன்னரசு, சேலம் மிதுன் குமாரும் முறையே முதல் மூன்று இடத்தை பெற்றனர்.
முதல் பரிசாக 25 ஆயிரம், இரண்டாவது பரிசாக 15 ஆயிரம், மூன்றாவது பரிசாக 10 ஆயிரம் என ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றும் வழங்கப் பட்டன. இது தவிர, ஒவ்வொரு பிரிவிலும் 10 பேருக்கு ஐந்தாயிரம் ரூபாய் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
பரிசுகளை வழங்கி, துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இளைஞர் அணி மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்அடிப்படையில், இளைஞரணி அறக்கட்டளை சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள், முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவுக்காக 50 லட்சம் ஒதுக்கி பணிகளை நிறைவேற்றி வருகிறோம். இந் நிகழ்ச்சியை இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
வரும் ஆண்டுகளில் ஒன்றியம், நகராட்சி அளவிலும் போட்டிகளை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதமே போட்டிகள் துவக்கினால்தான் இது சாத்தியமாகும். இளைஞர் அணிக்கு விருதாக நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள். பரிசு கிடைக்காதவர்கள் கவலைப் பட வேண்டாம். அதனால், சோர்வடையத் தேவையில்லை.நான் ஏற்கனவே தேர்தலில் ஒருமுறை தோற்றேன். சோர் வடையாமல் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
அதேபோல் அண்ணாதுரை சொந்த தொகுதியில் தோல்வி கண்டார். காமராஜரும் தோல்வியடைந்தார். வெற்றியையும், தோல்வியையும் சமமாக கருதியதால்தான், தற்போது தன்மானத் தோடு வாழ முடிகிறது.
அவர்களுடைய பெயரில் போட்டிகளையும் நடத்தி வருகிறோம். மாணவர்களும் வெற்றி தோல்வியை சமமாகக் கருதி, வாழ்வில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் மனைவி துர்கா, அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பரசன், பொங்கலூர் பழனிச்சாமி, சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன், வடசென்னை மாவட்ட செயலர் வி.எஸ்.பாபு உட்பட பலரும் பங்கேற்றனர்.
