UPDATED : அக் 19, 2009 12:00 AM
ADDED : அக் 19, 2009 10:39 AM
தமிழகத்தில் உங்களது ஆரம்ப காலம் தொடர்பாக சில குழப்பங்கள் நிலவுகின்றன. நீங்கள் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.யூ.சி., படித்ததாக தகவல்கள் வருகின்றன. ஆனால், சென்னையில் வசிக்கும் உங்களது உறவினர்கள் கிருஷ்ணன் (பெரியப்பா பாலசுப்ரமணியனின் மகன்) மற்றும் ஜானகி (அத்தை பாகிரதியின் மகள்), ஆகியோர், மூன்றாவது வயதிலேயே நீங்கள் தமிழகத்தை விட்டு சென்றுவிட்டதாகவும், பெற்றோருடன் பரோடா சென்றதாகவும் தெரிவிக்கின்றனர்.
உங்களது ஆரம்ப காலத்தைப் பற்றி உங்கள் மூலமாகவே அறிய விரும்புகிறோம். எனது உறவினர்கள் சொல்வது சரி. நான் சிதம்பரத்தில் பள்ளியில் படித்ததாகவும், அண்ணாமலை பல்கலையில் பி.யூ.சி., படித்ததாகவும் வரும் பொய்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் என்னைச் சந்தித்திராத கோவிந்தராஜன் என்பவர், எனக்கு ஆசிரியராக இருந்தார் என்றும், நான், சராசரிக்கும் சற்று மேலான மாணவன் என்றும் எப்படி கூறுகிறார் என்பதும் புரியவில்லை.
சிதம்பரம் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் எப்படி என்னை ஞாபகம் இருப்பதாக தெரிவித்தார் என்பதும் தெரியவில்லை. சிதம்பரத்தில் பிறந்த நான், எனது மூன்றாவது வயதில், என் தந்தை பயோ கெமிஸ்டிரி பேராசிரியராக பணிபுரிந்த பரோடாவிற்கு சென்று விட்டேன். பரோடாவில் உள்ள ஜீசஸ் அண்டு மேரி கான்வென்டில் பள்ளிப் படிப்பை முடித்தேன். தொடர்ந்து, பரோடா எம்.எஸ்., பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தேன். உங்களது பெற்றோர் மற்றும் அவர்களது கல்வி பற்றி? எனது பெற்றோர் இருவரும் விஞ்ஞானிகள்.
பரோடாவில் பயோ கெமிஸ்டிரி பேராசிரியர்களாக பணிபுரிந்தனர். இருவரும் ஊட்டச்சத்து தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதிலும், ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்வது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். உங்களது திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைகள் பற்றி? குழந்தைகள் புத்தக எழுத்தாளர் வெரா ரோஸ்பெரியை திருமணம் செய்து கொண் டேன். அவரது 25க்கும் மேற்பட்ட புத்தகங்களில், சாவித்ரி கதை உள்ளிட்ட இந்தியாவைப் பற்றிய புத்தகங்களும் உள்ளன. அவரது புத்தகங்களை, www.amazon.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
நீங்கள் அறிவியலை தேர்ந்தெடுக்க எது தூண்டுகோலாக இருந்தது? இயற்பியலில் இருந்து உயிரியலுக்கும் பிறகு வேதியியலுக்கும் எவ்வாறு மாறினீர்கள்? அறிவியல் குடும்பத்தில் வளர்ந்ததால், எனக்கு அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. குழந்தைகளின் வாழ்க்கையில் கவலை கொள்ளும் மற்ற பெற்றோரைப் போலவே, நான் டாக்டராக வேண்டும் என எனது தந்தை விரும்பினார். ஆனால், நான் தேசிய அறிவியல் திறன் தேர்வு (நேஷனல் சயின்ஸ் டேலன்ட் சர்ச் எக்சாம்) எழுத தாயார் ஊக்கமளித்தார்.
எனக்கு கல்வி உதவித்தொகை கிடைத்தபோது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேருவதைத் தவிர்த்து, பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பரோடா எம்.எஸ்., பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்சி., படிப்பில் சேர்ந்தேன். ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு மற்றும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி தேர்வு எழுதிய போதும், என்னுடைய அதிர்ஷ்டமாக அங்கு இடம் கிடைக்கும் அளவிற்கு நான் தேர்வினை சிறப்பாக எழுதவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொள்கிறேன். இல்லாவிட்டால், நான் அடிப்படை அறிவியல் படிப்பில் சேராமல் இருந்திருக்கக் கூடும். உங்களது உறவினர் கிருஷ்ணன், உங்களது 56வது வயதில் நீங்கள் உலகப் புகழ் பெறுவீர்கள் என அவரது தந்தை பாலசுப்ரமணியன் கணித்திருந்ததாக தெரிவித்தார்.
இந்தக் கணிப்பு பற்றி நீங்கள் அறிந்திருந்தீர்களா? இந்த கணிப்பு பற்றி நான் அறிந்திருக்கவில்லை. உண்மையில், இவை பொருத்தமற் றவை. எனது பணியில் தொடர்பில்லாதவர் கள், அதைப்பற்றி புரிந்து கொள்ளாதவர்கள், இதுபோல் கணிக்க முடியாது. எனவே, அவரது கருத்து, உறவினர் சாதனை படைத்த பெருமையில் வருவது. மேலும் பல விஞ்ஞானிகள் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு மட்டும் தான் இத்தகைய பரிசுகளைப் பெறும் அதிர்ஷ்டம் கிடைக்கிறது.
இந்தியாவில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து நீங்கள் திருப்தி அடைகிறீர்களா? இங்கு ஆராய்ச்சியை மேம்படுத்த நீங்கள் தெரிவிக்கும் ஆலோசனைகள் என்ன? இந்தியாவில் அறிவியல் முன்னேறி வருகிறது என்று தான் நினைக்கிறேன். ஏனெனில், முன்பு இருந்ததை விட தற்போது ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. இருந்தாலும், அடிப்படை ஆராய்ச்சிக்கு அதிகளவில் ஆதரவளிக்க வேண்டும். இதனால், நீண்ட காலத்தில் அதிகளவில் கல்வியறிவு பெற்ற விஞ்ஞானிகள் உருவாக்கப்படுவர்.
இதன்மூலம் எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கு வழிவகை ஏற்படும்.
ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதி பெரும்பாலும் மத்திய ஆராய்ச்சி மையங்களுக்கு மட்டுமே செல்வதே நான் பார்த்ததில் முக்கிய பிரச்னை. பல்கலைக் கழகங்களின் நிலை முன்பை விட மோசமடைந்துள்ளது. ஆராய்ச்சியாளர்களிடமிருந்து மாணவர்களை பிரிப்பது மோசமானது. எனவே, பல்கலைக் கழகங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் அல்லது ஆராய்ச்சி மையங்கள் பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்பட வேண்டும். இதனால், இளம் மாணவர்கள், முன்னணி ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பணிபுரிவதுடன், தேர்விற்காக படிப்பதற்கு பதில், அறிவியல் ஆராய்ச்சியில் எப்படி ஈடுபடுவது என்பதை தெரிந்து கொள்வர்.
இந்தியாவில் உள்ள முன்னணி அறிவியலாளர்கள் ஏற்கனவே இப்பிரச்னையை அறிந்திருக்கின்றனர் நிலைமையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர் என நினைக்கிறேன். உங்களது ஆராய்ச்சிப் பணிக்கு இத்தகைய புகழ்மிக்க பரிசு கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா? ரிபோசோம் ஆராய்ச்சி இத்தகைய பரிசுகளை பெறும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எனக்குத் தெரியும். ஆனால், ரிபோசோம் தொடர்பான ஆராய்ச்சியில் பலரும் ஈடுபட்டுள்ளனர். எனவே, பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் நானும் இருப்பேன் என எதிர்பார்க்கவில்லை. நான் அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன். இவ்வாறு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
