ஏ.பி.எல்., கல்வி முறை: நேரில் கண்டறிய சீன கல்வியாளர்கள் வருகை
ஏ.பி.எல்., கல்வி முறை: நேரில் கண்டறிய சீன கல்வியாளர்கள் வருகை
UPDATED : அக் 20, 2009 12:00 AM
ADDED : அக் 21, 2009 10:55 AM
அ நிறம் | அளவு
தமிழக பள்ளிகளில் ஆசிரியரை மையமாக வைத்து பாடம் கற்பிக்கும் கல்வி முறை நிறுத்தப்பட்டு, மாணவர்களை மையமாக வைத்து நடத்தப்படும் செயல்வழிக் கற்றல்(ஏ.பி.எல்.) மற்றும் படைப்பாற்றல் கல்வி(ஏ.எல்.எம்) ஆகிய இரு புதிய கல்வி முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கல்வி முறை, மாணவர்கள் இயல்பாக பாடம் கற்க உதவுகிறது. கலர் கலரான அட்டைகளில் தமிழ், ஆங்கில எழுத்துக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களுடன் இந்த அட்டைகளை பயன்படுத்தி மாணவர்களே கற்கும் இந்த புதுமையான கல்வி முறையை பெற்றோர், ஆசிரியர் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். தங்கள் பள்ளிகளிலும் இந்த புதிய பாட முறையை புகுத்த, பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் அனுமதி கேட்டுள்ளன.தமிழகத்தில் பிற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்தில் இக்கல்வி முறை வெகு சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருவதால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில கல்வியாளர்களும் இங்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
அண்டை மாநில கல்வியாளர்களுக்கு அடுத்தபடியாக, தற்போது அண்டை நாடுகளும் புதிய கல்வி முறையை பற்றி அறிந்து நேரில் பார்வையிட விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த வரிசையில் முதலாவதாக சீன நாட்டு கல்வியாளர்கள் இம்மாதம் வருகை தருகின்றனர்.
அக்டோபர் 25 முதல் 28 வரை சென்னை மற்றும் கோவை மாவட்டங்களுக்கு வருகை தரும் இக்குழுவினர், ஏ.பி.எல்., ஏ.எல்.எம்., கல்வி முறைகள் கற்பிக்கப்படும் ரீதி, பயன்படுத்தப்படும் கல்வி உபகரணங்கள், ஆங்கிலம் கற்பிக்க பயன்படுத்தப்படும் ஹலோ இங்கிலீஷ் திட்டம் ஆகியவற்றை பற்றி நேரில் கண்டறிய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
