மதுரை மாநகராட்சி நடத்தும் மாணவர்களே இல்லாத துவக்கப் பள்ளி!
மதுரை மாநகராட்சி நடத்தும் மாணவர்களே இல்லாத துவக்கப் பள்ளி!
UPDATED : நவ 03, 2009 12:00 AM
ADDED : நவ 03, 2009 11:57 AM
மதுரை பந்தடி மகால் ரோட்டில் மாநகராட்சி துவக்கப் பள்ளி உள்ளது. கடந்த ஜூன் முதல், மாணவர்கள் யாருமின்றி, வெற்றுப் பள்ளியாகச் செயல்படுகிறது. இப்பள்ளியை கவனிக்க, ஒரே ஒரு உதவி ஆசிரியை உள்ளார். தினமும் பள்ளியை தனக்காக திறப்பார். ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், பாதுகாப்புக்காக பள்ளியின் கதவுகளை மூடிக் கொண்டு, உள்ளே அமர்ந்து கொள்கிறார்.
கடந்த ஆண்டு இப்பள்ளியில் நான்கு மாணவர்களே படித்தனர். இந்த ஆண்டு அதுவும் இல்லை. மாநகராட்சி கல்வித் துறையில் பள்ளிகளுக்கென கல்வி அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் உள்ளனர். இப்பள்ளியில் மாணவர்கள் இல்லையென, கமிஷனரிடம் யாரும் எடுத்துக் கூறவில்லை போலும்.
கடந்த ஜூன் முதல் இந்த ஆசிரியை வகுப்பு நடத்த முடியவில்லை. ஆனால் மாநகராட்சி ஒழுங்காக சம்பளம் அனுப்பி வருகிறது. இதனால் சும்மா இருக்க வேண்டாமே என நினைத்த இந்த ஆசிரியை, அருகில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியின் ஆறாவது வகுப்பு மாணவர்களை அழைத்து சில பாடங்களை நடத்தி வருகிறார்.
மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி இது. குடியிருப்புகள் அதிகம் இல்லாததால் மாணவர்கள் வருகை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவிட்டது. தற்போது இந்த பள்ளியை அருகில் உள்ள மற்றொரு பள்ளியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.
தமிழக அரசு ஓராசிரியர் பள்ளிகளே இருக்கக் கூடாது என்று கருதி, அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கிறது. சமீபத்தில் ஈராசிரியர் பள்ளிகளிலும் 70 மாணவர்களுக்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இப்படி ஒரு சூழ்நிலையில் மாணவர்களே இன்றி பள்ளி இயங்குவது வேடிக்கையாக உள்ளது.
