தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடித்தட்டு மக்களுக்கு இக்னோ பல்கலையின் சேவை

அடித்தட்டு மக்களுக்கு இக்னோ பல்கலையின் சேவை

அடித்தட்டு மக்களுக்கு இக்னோ பல்கலையின் சேவை


UPDATED : நவ 04, 2009 12:00 AM

ADDED : நவ 04, 2009 12:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2009 12:00 AM ADDED : நவ 04, 2009 12:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இக்னோ மதுரை மண்டலத் தலைவர் எம்.சண்முகம் அளித்த சிறப்பு பேட்டி:


இக்னோ பல்கலையின் மதுரை மண்டலத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன, எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்?


இந்திய அளவில் 22 லட்சம் பேர் படிக்கின்றனர். மதுரை மண்டலத்தில் கோவை, திருப்பூர், திருச்சி, கரூர், தஞ்சை, திண்டுக்கல் மற்றும் தென்பகுதியில் உள்ளவை என 17 மாவட்டங்கள் உள்ளன. இதில் 11 ஆயிரத்து 250 பேர் படிக்கின்றனர். இதில் பி.எட்., படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் உள்ளது. ஓராண்டுக்கு முன் இம்மையத்திற்கு 30 படிப்பு மையங்கள் இருந்தன. தற்போது 86 மையங்கள் உள்ளன.

இக்னோ பல்கலையில் வேலையில் இருப்போர் மட்டுமே படிக்க முடியுமா?


மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புக்கு ஏற்ப கல்வித் தகுதி மாற்றம் பெறுகிறது. பி.எட்., இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், எம்.பி.ஏ., போன்ற திறன் மேம்பாடு, அனுபவம் தேவைப்படும் படிப்புகளுக்கு பணியில் இருப்போருக்கே வாய்ப்பு தரப்படுகிறது. மற்ற சான்றிதழ், பட்டயம், பட்டப்படிப்புகளில் பொதுவான மாணவர்களும் நேரடியாக பங்கேற்கலாம்.

இப்பல்கலையின் கல்வித் தகுதிகளை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய இயலுமா?


நிச்சயமாக. இப்பல்கலையால் நடத்தப்படும் படிப்புகள் அனைத்தும் அவற்றிற்கென உள்ள சட்டரீதியான அமைப்புகளின் அங்கீகாரம் பெற்றவை. தொழில் படிப்புகள் அனைத்தும் ஏ.ஐ.டி.சி.இ., மற்றும் என்.சி.டி.இ., போன்றவற்றால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. இப்பல்கலையின் துணைவேந்தர்தான் தொலை நிலைக் கல்விக் குழு டெக் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பின் அங்கீகாரம் பெற்றே மற்ற தொலை நிலைக் கல்வி அமைப்புகள் செயல்படுகின்றன. அவை கல்வி, வேலை வாய்ப்பு பதிவுக்கு தகுதியுள்ளதா என்ற சந்தேகமே எழவேண்டியதில்லை. மேலும் மற்ற தொலை நிலைக் கல்வி நிலையங்கள் தங்கள் படிப்பு மையங்களுக்கு பிராஞ்சைசி (தனியாருக்கான அனுமதி) வழங்குவது போல இக்னோ வழங்குவதில்லை. அனைத்து படிப்பு மையங்களும் நேரடியாகவே நடத்தப்படுகிறது.

மதுரை துணை மண்டலம் ஓராண்டுக்கு முன் மண்டல அந்தஸ்து பெற்றது. இந்த ஓராண்டில் இதன் சாதனைகள் என்ன?


திறன் மேம்பாடு மற்றும் தொழில் சார் படிப்புகளுக்கென சிறப்பு படிப்பு மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. மண்டல அலுவலகத்திற்கென கோவில் பாப்பாக்குடியில் தமிழக அரசிடம் இடம் பெற்று மையம் கட்டுமான பணி முடியும் நிலையில் உள்ளது. படிப்பு மையங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங் களாக்கி, கம்ப்யூட்டர், இணையதள வசதிகளுடன் கல்விச் சேவைக்கான வழிவகை காணப்பட்டுள்ளது.

இக்னோவின் சேவை அடித்தட்டு மக்களுக்கு எந்தளவில் கிடைக்கிறது?


சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ளவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல சான்றிதழ் படிப்புகளை குறைவான கட்டணத்தில் வழங்குகிறது. உதாரணமாக தேனீ வளர்ப்பு, கோழிப்பண்ணை தொழில், பட்டுப்பூச்சி வளர்ப்பு, காலணி தயாரிப்பு, பானை வனைதல், இயற்கை விவசாயம், மோட்டார் சைக்கிள் பழுதுநீக்குதல், சில்லறை வணிகம் போன்ற குறுகிய கால படிப்புகளால் பல ஆயிரம் பேர் பயன்பெறுகின்றனர். மலைவாழ் மக்களுக்கென தனியாக படிப்பு மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளின் திறன் மேம்பாட்டுக்காக மதுரை, திருச்சி, கோவையில் உள்ள சிறைகளில் சிறப்பு படிப்பு மையங்கள் செயல்படுகின்றன. மதுரை சிறையில் இந்த ஆண்டு 40 கைதிகள் கம்ப்யூட்டர் படிப்பில் சான்றிதழ் பெற்றனர்.

இக்னோ இந்த ஆண்டு வெள்ளி விழா காண உள்ள நிலையில் எதிர்கால திட்டங்கள் என்ன?


வணிகத் திறன், பட்டுப்பூச்சி வளர்த்தல், கோழிப்பண்ணை தொழில், மழைநீர் சேமிப்பு, இயற்கை விவசாயம் ஆகிய சான்றிதழ் படிப்புக்கான பாடங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. பி.எட்., படிப்பில் சேர்க்கை பெறும் ஆசிரிய மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக கூடுதல் பட்டய, சான்றிதழ் படிப்புகளை ஏககாலத்தில் படித்து முடிக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. முன்னாள் மாணவர்கள் பெற்ற வெற்றி வழிமுறைகளை இந்நாள் மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வழி செய்தல். திறந்தநிலை மற்றும் தொலை தூர கல்வி முறையை மேம்படுத்தும் நோக்கில் கல்வியாளர்களை அழைத்து கருத்தரங்கம், பயிற்சி பட்டறைகளை நடத்துதல் போன்றவை நோக்கமாக உள்ளது.

இக்னோவில் மாணவர்கள் சேர்க்கை எப்படி இருக்கிறது?


டி.டி.எச். முறையில் வீடுகளில் அமர்ந்து கொண்டே பாடங்களை படிக்கும் அளவு கற்பித்தல் உத்தி மேம்பட்டுள்ளது. 40 முதல் 50 சதவீத வகுப்புகள் தொலைத் தொடர்பு வசதி மூலமே நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரை மண்டலத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் 15 சதவீதமும், இந்திய அளவில் 20 சதவீதம் அளவும் அதிகரிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us