UPDATED : நவ 05, 2009 12:00 AM
ADDED : நவ 05, 2009 03:50 PM
மாநாட்டு சிறப்பு அலுவலகம் மற்றும் அலுவலர்களுக்காக, முதற்கட்டமாக 70 லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 24ல் இருந்து 27 வரை, கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, நான்கு நாட்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநாட்டுக்கான தனி அலுவலர்கள் மற்றும் குழு உறுப்பினர்களை நியமித்து, பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது தமிழக அரசு. மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கான இடங் களைத் தேர்வு செய்ய முதல்வர் கருணாநிதி, நாளை கோவை வருகை தருகிறார். கொடிசியா தொழிற்காட்சி வளாகம் மட்டுமின்றி, மேலும் சில இடங்களை முதல்வர் பார்வையிட உள்ளதாக, அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தொழிற்காட்சி வளாகத்தில் நிகழ்ச்சியை நடத்துவதால், கோவை நகருக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்ற அதிருப்தி மக்களிடம் உள்ளது.
இந்த விஷயம், முதல்வரின் கவனத்துக்குச் சென்றிருப்பதால், அதிகாரிகள் பரிந்துரைத்த இடங்களைத் தவிர்த்து, வேறு சில இடங்களையும் முதல்வர் பார்வையிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனாலும், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்திலேயே நிகழ்ச்சியை நடத்த, மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டுவதாகத் தெரிகிறது. இந்த மாநாட்டுக்கான தனி அலுவலகம் அமைப்பதற்கான அரசாணை வந்துள்ளது.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை சார்பில், இந்த அரசாணை (எண்: 326/ தேதி: 31-10-2009) வெளியிடப்பட்டுள்ளது. செம்மொழி மாநாட்டுக்கான தனி அலுவலர் அலாவுதீன், சிறப்புப் பணி அலுவலர் பிரபாகரன் ஆகியோரைத் தவிர, மேலும் 16 பணியிடங்களை உருவாக்கி இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தாசில்தார் - 2, துணை தாசில்தார் - 2, உதவியாளர் - 2, இளநிலை உதவியாளர் - 1, அலுவலக உதவியாளர் - 3, ஓட்டுனர் - 2, தட்டச்சர் - 2, கணக்கு அலுவலர் - 1, கணக்காளர் - 1 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலர்களுக்கு, சம்பளம் மற்றும் இதர படிகளுக்கு உத்தேசத் தொகையாக, 42 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அலுவலகத்துக்கு புதிய அம்பாசிடர், பொலீரோ வாகனங்கள் வாங்க 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், எரிபொருள் மற்றும் பராமரிப்புக்காக மூன்று லட்சம் ரூபாயும், அலுவலக தளவாடச் சாமான்களுக்காக மூன்று லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை சர்க்யூட் ஹவுஸ் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் பங்களாவில், இதற்கான தனி அலுவலகம் அமைக்க முடிவு செய்யப் பட்டு, அந்த கட்டட வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. சிறப்புப் பணி அலுவலகத்துக் கான அலுவலர்கள் ஒரு வாரத்துக்குள் தேர்வு செய்யப்படுவர்.
