ஈரோடு அரசு மகளிர் பள்ளியில் ரூ. 1.50 கோடியில் வகுப்பறை
ஈரோடு அரசு மகளிர் பள்ளியில் ரூ. 1.50 கோடியில் வகுப்பறை
UPDATED : நவ 07, 2009 12:00 AM
ADDED : நவ 07, 2009 09:13 AM
ஈரோட்டில் பன்னீர் செல்வம் பூங்கா அருகே மூன்று ஏக்கர் பரப்பளவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
1860ல் துவங்கப்பட்ட இப்பள்ளி ஈரோட்டில் மாதிரி பள்ளியாகவும், ஆசிரியர் பயிற்சி பள்ளியாகவும் செயல்பட்டு வந்தது. 1978 ஜூலை 1ல் மேல்நிலைப்பள்ளியானது. 1987 செப்டம்பர் 28ல் இப்பள்ளிக்கு கல்வித்துறையால் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2005ல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிருந்த ஆரம்பப்பள்ளி, தொடக்ககல்வித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது இப்பள்ளியில் ஆறு முதல் ப்ளஸ் 2 உள்ளது. 2,700 மாணவியர் கல்வி பயில்கின்றனர். 80 ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கின்றனர். சென்றாண்டு பொதுத்தேர்வில் 85 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
நீண்ட நாட்களாக இப்பள்ளியில் வகுப்பறை கட்டிடம் மற்றும் அடிப்படை வசதியின்றி மாணவியர் அவதிப்பட்டு வந்தனர். நபார்டு வங்கி மூலம் பள்ளி கட்டமைப்பு வசதிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தென்திசையில் உள்ள காலியிடத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தேர்வு செய்து, கட்டிடம் கட்டுவதற்கான வரைபடைத்தை தயார் செய்தனர்.
மொத்தம் 20 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில், 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கான கட்டிட அளவை துவங்கியது. மூன்று மாடி கட்டிட வசதியுடன், 20 வகுப்பறைகள், இரண்டு அறிவியல் ஆய்வுக்கூடம், 1,500 சதுரஅடியில் பத்து கழிப்பிடங்கள் கட்டப்படவுள்ளது. பள்ளி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர், குடிநீர்வசதி, மேல்நிலைத்தொட்டி, ஆழ்க்குழாய் கிணறு ஆகியவை அமைக்கப்பட உள்ளது.ஒவ்வொறு தளமும் 6,500 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு, வகுப்பறைகளுக்கு அவசர வழியும் ஏற்படுத்தப்படவுள்ளது. இப்பணி ஓராண்டுக்குள் முடிவடையும்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்குமார் கூறியதாவது: ஈரோடு அரசு மகளிர் பள்ளி மாவட்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்தது. எண்ணற்ற மாணவியர் கல்வி பயின்று செல்கின்றனர். அறிவியல் ஆய்வகம் மற்றும் பள்ளி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை கூடுமானவரை அதிகாரிகள் விரைவில் செய்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
