UPDATED : நவ 08, 2009 12:00 AM
ADDED : நவ 08, 2009 10:03 AM
நிதித்துறையைக் கலந்து பேசி, முதல் அமைச்சரின் ஆலோசனையைப் பெற்று இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மதுரையில் நடத்திய தென்மண்டல ஆசிரியர்கள் மாநாட்டில் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தொடக்க மற்றும் மேல்நிலை கல்வியில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகளை செவிமடுக்காத காலம் ஒன்று இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை. ஆசிரியர்களின் பணி மாறுதல், பணிப்பதிவேடு போன்ற சிறு குறைகள் கூட உடனடியாக களையப்பட்டது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொறுப்புகளும், சுமைகளும் என்பதை அறிவேன். ஆசிரியர்களின் உணர்வை, உள்ளக்கிடக்கையை காயம்படாமல் அரசு கவனமாக காத்து வருகிறது. ஊதிய முரண்பாடுகளைக் களைய, கோரிக்கையின் படி ஒரு நபர் குழு மூலம் விரைவில் பரிசீலனை செய்யப்படும்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் பணியிடங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்படும். தங்களது 42 கோரிக்கைகளில் 16 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. பிற கோரிக்கைகளும் ஆராயப்பட்டு நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
பள்ளி கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி பேசுகையில், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வில் கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் குறைகள் தீர்க்கப்படுகிறது. மாநில அரசு தொடக்கக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அடுத்ததாக 2017க்குள் இடைநிலைக் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படும். இதற்காக மத்திய அரசிடம் ரூ. இரண்டாயிரம் கோடி கேட்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வந்தால் இடைநிலை, மேல்நிலைக் கல்வி வலுப்படும் என்றார்.
மாநில பொதுச் செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநிலத் தலைவர் மணிவாசகன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சுந்தரமூர்த்தி, அமைப்புச் செயலாளர் பிரபாகர், மகளிரணி செயலாளர் வசந்தா, துணைப் பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் பார்த்திபன் நன்றி கூறினார். மாநில பிரச்சார செயலாளர் பிரபாகர், மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் அய்யர் உட்பட பலர் பங்கேற்றனர்.
