தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?

எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?

எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?


UPDATED : நவ 15, 2009 12:00 AM

ADDED : நவ 18, 2009 05:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2009 12:00 AM ADDED : நவ 18, 2009 05:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதன் சாதக, பாதகங்கள் குறித்து சொல்லுமாறு, கருத்து சொல்லலாம் வாங்க என்ற தலைப்பில், தினமலர் நாளிதழ் அறிவிப்பு வெளியிட்டது.

கல்வித்துறை அறிஞர்கள், வல்லுனர்கள், கல்வித் துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்றவர்கள், வாசகர்கள் என, பல தரப்பினரும், தங்கள் கருத்துக்களையும், அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், பக்கம், பக்கமாக அனுப்பி வருகின்றனர். கட்டுரைகள், தொடர்ந்து வரவேற்கப்படுகின்றன.

சிறந்த கட்டுரைகளுக்கு, முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ஏழு பேருக்கு ஆறுதல் பரிசுகளும் உண்டு. ஒரே வாரத்தில் குவிந்துள்ள ஏராளமான கட்டுரைகளைப் படித்து, அலசி ஆராய்ந்ததில், ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு உபயோகமான கருத்தைக் கொண்டுள்ளது தெரிந்தது. இவற்றில் பல, அரசின் கவனத்துக்கு உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டியவையாகக் கருதப்படுவதால், அவை ஒவ்வொன்றையும், தினமலர் நாளிதழில் வெளியிட, முடிவு செய்யப்பட்டுள்ளது.

* அவற்றில் சில...


* ஆசிரியர்களை சரி செய்யுங்கள்: சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு முன், அரசிடம் உள்ள தவறுகளை முதலில் களைந்தாலே, கல்வியின் தரம் உயர வழியுள்ளது. அனைத்து தனியார் பள்ளிகளிலும் இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்புடன் கூடிய, ஆசிரியர் பயிற்சி பட்டப் படிப்பு முடித்தவரை நியமனம் செய்கின்றனர். ஆனால், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து, ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பை முடித்தவர்கள், தொடக்கப் பள்ளி வகுப்புகளை நடத்துகின்றனர். பிறகு தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தநிலை கல்வியிலோ பட்டப் படிப்பை முடித்து, 10ம் வகுப்பு வரை பாடம் நடத்த பதவி உயர்வு பெறுகின்றனர். இவர்களுக்கு ஆறு முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கற்றுத்தர போதிய ஆங்கிலப் புலமை இருப்பதில்லை. எனவே, ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பை உடனடியாக அரசு நிறுத்தி, முறையான வழியில் (+2, +3, +1) பட்டப்படிப்பை முடித்தால் மட்டுமே, பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு தர வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே, சமச்சீர் கல்விக்கு நல்ல அடித்தளம் அமையும்.
- ஆ.தண்டபாணி, திருப்பூர்.


* மொழிக்கு முக்கியத்துவம் வேண்டும்:
சமச்சீர் கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் (தேவைப்படின் பிறமொழிப் பாடங்களும்) மிகத் தெளிவாக பேச, எழுத, கற்பனைத் திறனை வளர்க்க, தொடர்பு கொள்ளும் திறன் வளர்க்கக் கூடியதாய் இருக்க வேண்டும். கணிதத்தில் செய்முறை, செயல்முறை பயிற்சிகளும், அறிவியில், வரலாறு, சமூகவியல், புவியியல், அரசியல், கணினி, உளவியல், உணர்வியல், உடலியல், விளையாட்டுப் பாடங்களும், விருப்பப் பாடமாய் கலைக்கல்வி, தொழிற்கல்வி, யோகா, தியானம் போன்ற பாடத் திட்டங்களோடு வடிவமைக்கலாம். எல்லா பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்; சம நோக்கு, சம வாய்ப்பு; பெற்றோருக்கான விழிப்புணர்வு கருத்துகள்; பாடத்திட்டம் தயாரிக்க அறிஞர்கள் மற்றும் தரமான ஆசிரியர்களை கொண்ட குழு; சுமை குறைப்பு, இலகுவான பாடத்திட்டம், அதேசமயம் உலகத்தரம் உள்ள பாடத்திட்டம் வேண்டும். ஆங்கில மொழி அறிவு அதிகம் தேவை. எனவே, ஆசிரியர்களுக்கு முழுமையான ஆங்கிலப் பயிற்சி அளிக்க வேண்டும். சமச்சீர் கல்வித் திட்டத்தால் பாதிக்கக் கூடிய ஆசிரியர்கள், பள்ளிகளை, அரசு கவனத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும்.
- சகோ.ம.லிட்டில் மேரி, ஆசிரியை, கடலூர்.


* பக்தி முதல் நாட்டுப்பற்று வரை அவசியம்: ஆரம்ப கல்வித் திட்டத்திலேயே இறைபக்தி, குடும்ப உறவுகள், பிறருக்கு உதவுதல், வாய்மையே வெல்லும், பிராணிகளிடம் கருணை, பண்டிகை நோக்கம், மதத்தலைவர் பற்றி கூறலாம். உயர்நிலைக் கல்வியில், நல்லொழுக்கம், நாட்டுப்பற்று, சுகாதாரம், இயற்கை வைத்தியம், நமது மண்வளம், கிராம மேம்பாடு, இந்திய மற்றும் அயல்நாட்டு விவசாய முறை, கலாசார பெருமைகள், சத்தான உணவு, இயற்கை, செயற்கை உரங்கள், தரமான விவசாயம், மூலிகைகளை பயிரிடுதல், வன பராமரிப்பு, தேவையற்ற ஆடம்பர செலவை குறைத்தல் போன்றவை கூறலாம். மேனிலை கல்வித் திட்டத்தில், கூட்டு குடும்பத்தின் நன்மை, பெற்றோரை பேணுதல், அண்டை நாட்டுடன் நட்புறவு, அரசியலுக்கு எதிரான கலவரங்களில் கொடி பிடித்தலை தவிர்த்தல், காற்றோட்டமான வீடு அமைத்தல், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமை, சுற்றுப்புற வெப்பமடைதல், பணவீக்கம், நீர்வள மேம்பாடு, போலிகளை தயார் செய்யாமை, கடமையாற்ற கையூட்டு பெறாமை, சேமிப்பின் முக்கியத்துவம், காவல், நீதித் துறையின் முக்கிய சட்டங்கள் அறிதல், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி, நேச்சுரோபதி, ஆக்குபேஷனல் தெரபி, செக்ஸ் கல்வி போன்றவற்றை கூறலாம். ஓவியம், பாட்டு, நடனம், தையற்கலை, விளையாட்டு, கணினி, சிறுதொழில் கற்பித்தல் போன்றவற்றில் ஆசிரியர்களின் பங்கும் அவசியம்.
- ஈடித் அரோரா பிராங்களின், முதுநிலை ஆசிரியை (ஓய்வு), கடலூர்.


* மொழி தான் முக்கியம்: வகுப்பறையில் குழந்தைகளை, பேசாதே, ஓடாதே... என கட்டளையிடுவதால் தான் இரண்டு, மூன்று வயதில் மொழியை நன்கு பேசிய, பயன்படுத்திய குழந்தை, பள்ளிக்கு வந்தபின், பேசத் தயங்குகிறது. எண்ணம், கருத்தை புரியவும், மொழித்திறன் பெறவும், மொழி ஆளுமையில் வல்லமை பெறவும் கல்வியில் வாய்ப்பளிக்க வேண்டும். குழந்தைகள் வீட்டில், வெளியில் பெறக் கூடிய அனுபவங்களை, பாடச் சூழலில் இணைத்து, பாடத்திட்டம் அமைக்கலாம். மொழிப்பாடமே பிற பாடங்களுக்கு அடிப்படை. மொழிக்கு பின்னால் உள்ள உணர்வுகளை புரிந்து கொண்டால் தான், பிற பாடங்கள் எளிதில் புரியும். அதற்கேற்ப அமைய வேண்டும். முதலில் புரிதல், படித்தல், தங்கு தடையின்றி மொழியை வெளிக்கொணர்தல், அனைத்துத் துறைகளிலும் மொழியைப் பயன்படுத்தும் திறமை வளர்த்தல் (சொற்களஞ்சிய சொற்கள்), பாடத்தின் மையக் கருத்தை அறிதல், சிந்தித்தல், மொழியைத் திறமையாகக் கையாளுதல், படைப்பாற்றல் வாயிலாக கற்பனைத் திறனை மேம்படுத்துதல் போன்ற திறன்களை வளர்க்கும் வகையில் சமச்சீர் கல்வித் திட்டம் அமைக்கலாம்.
- பொ.சுப்புலட்சுமி செல்வராஜ், சிவகங்கை.



* பாடப்புத்தகங்கள் மட்டும் சமச்சீராக இருந்தால் போதாது:
சமச்சீர் கல்வியின் தரம் என்பது மத்திய கல்வி, மெட்ரிக் கல்வியுடன் இணைந்த மாநிலக் கல்வியாக இருக்க வேண்டும். மெட்ரிக் பள்ளிகளில், பல ஆயிரக்கணக்கில் பெற்றோர் பணம் கட்டி, தன் பிள்ளைகளை படிக்க வைக்க காரணம் பொது அறிவு, கணினி, இந்தி, ஆங்கில பேச்சு, அடிப்படை கட்டமைப்பு வசதி, நூலக வசதி தானே. இத்தகைய அனைத்து வசதிகளையும், சமச்சீர் கல்வியின் மூலம், அரசுப் பள்ளிகளில் படிப்படியாக கொண்டு வர வேண்டும். சமச்சீர் கல்வியானது, சமச்சீரான புத்தகங்களை வழங்குவதோடு முடியக் கூடாது. அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும், குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச கட்டணம் ஒன்றை அரசே நிர்ணயிக்க வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த வல்லுனர்களை கொண்டு, அனைத்து பாடங்களுக்கும் சரியான பயிற்சி கொடுக்க வேண்டும். அதன்மூலம், அகில இந்திய போட்டித் தேர்வுகளில் சாதிக்க, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவனால் கூட முடியும். தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடங்களை பொறுத்தவரை, உச்சரிப்புக்கு ஒலி, ஒளி நாடா அல்லது சிடி, டிவிடிக்களை பயன்படுத்தும் வசதியை அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும். ஆங்கிலத்தை முதல் வகுப்பிலிருந்தே துவங்கலாம். ஆங்கில வழிக் கல்வி மாணவர்கள் தமிழிலும் சிறந்து விளங்க, பயிற்சி புத்தகங்கள் தாமாகவே பூர்த்தி செய்து கற்கும்படி அமைய வேண்டும். தமிழ், ஆங்கில இலக்கண பயிற்சிகளை திறம்பட கற்பிக்க, சிறந்த பயிற்சி நூல்கள் வழங்க வேண்டும்.
- ஏ.ஹரிகிருஷ்ணன், பேராசிரியர், திண்டுக்கல்.


* புத்தக சுமை குறைய வேண்டும்: அனைத்து மத கொள்கைக் கோட்பாடுகளையும், அவற்றின் சாராம்சம் ஒன்று தான் என்பதையும் வலியுறுத்தி, மத நல்லிணக்கம், பக்தி உணர்வை மாணவர்களுக்கு ஊட்டக் கூடிய வகையில் அமைய வேண்டும். பாடத் திட்டம் மீத்திறமிக்க குழந்தைகளுக்கும் தீனி போடுவதாகவும், அதே நேரத்தில், கற்றலில் குறைபாடுடைய மாணவர்களை மேம்படுத்தத்தக்க வகையில் அமைதல் வேண்டும். புத்தகச் சுமையை குறைத்து, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என அனைத்து பாடங்களும், ஒரே புத்தக வடிவில் அமைக்கலாம். அனைத்து பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் எனும்போது, மாணவர்களிடையே வேறுபாடு குறையும். அதிக கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளின் கொட்டம் அடங்கும்; சிரமப்பட்டு தங்கள் குழந்தைகளை கான்வென்டில் படிக்க வைக்கும் பெற்றோருக்கும் விடுதலை கிடைக்கும்.
- தி.நா.கவிதா, கணித பேராசிரியை, காஞ்சிபுரம்.

* மனப்பாடம் செய்யும் முறை மாற வேண்டும்: மனப்பாடம் செய்து எழுதும் முறை மாற வேண்டும். நல்லவற்றை, நாட்டுநடப்பை தெரிந்து கொள்ளத் தான் கல்வி கற்கிறோம் என்ற எண்ணம், மாணவர்கள் மனதில் பதிய வேண்டும். தற்போது வேலை, ஊதியம், சொத்து சேர்த்தல் மட்டுமே கொள்கையாக உள்ளது. தன்னம்பிக்கை வளர்ப்பு, தோல்வி கண்டு மனம் துவளாமை, பிரச்னைகளை எதிர்கொண்டு, அதை தீர்ப்பதற்கு வழிதேடும் முனைப்பாக சமச்சீர் கல்வி இருக்க வேண்டும். பெற்றோர், பெரியோர், ஆசிரியர்களை மதிப்பதற்கு வழிகோலுவதாக அமைய வேண்டும். வாழ்க்கைத் தொழில் முறையும், கற்கும் கல்வி முறையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாக, வழிகாட்டுவதாக, சுயமாக சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர்களாக, தேசபக்தி, ஆன்மிக உணர்வு உள்ளவர்களாக இருத்தல் அவசியம். மாணவர்களை ஊக்குவிப்பதாக, சிறந்த குடிமகனாக உருவாக்கப்படுபவனாகவும், கற்பிக்கும் ஆசிரியருக்கும், கற்கும் மாணவர்களுக்கு இடையே ஒரு பாலமாகவும், பாடங்கள் விளங்க வேண்டும். இக்கல்வித் திட்டத்தில், இடம்பெற வேண்டிய பாடங்கள் மூன்று மட்டுமே. கணிதம், விஞ்ஞானம், வரலாறு. மாணவர்களின் மூளைக்கு வேலை கொடுப்பதாய் கணிதம் இருத்தல் வேண்டும். அறிவியல் பாடங்களாக இருப்பின், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள், அவற்றை கண்டுபிடிக்க அடிப்படையாக இருந்தது எது? அவர்கள் பட்ட துன்பம், வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் பாடத் திட்டங்கள் சேர்க்க வேண்டும்.
- எஸ்.ரேவதி ரமணன், தமிழாசிரியை, சென்னை.


* நல்லொழுக்கத்தை போதிக்கிறதா கல்வி?: தற்போதைய கல்விமுறை, நம் இளைய தலைமுறைக்கு மனிதத்தை, நல்லொழுக்கத்தை போதிக்கிறதா? பயங்கரவாத, நாசகார செயல்களிலும், கொலை, கொள்ளை போன்ற சமூகக் குற்றங்களிலும், கணினி துறையில் நடக்கும் ஹைடெக் குற்றங்களிலும் ஈடுபடுபவர்களின் கல்வித் தகுதிகள் பற்றி யாரேனும் சிந்தித்து பார்க்கின்றனரா? பணம் சம்பாதித்தல், உடனடியாக வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்ளல் என்ற கோணத்தில் தான், தற்போதைய கல்வியானது அணுகப்படுகிறது. இதுவே கல்வியை, கல்வி முறையை இயந்திரத்தனமாகவும், அர்த்தமற்றதாகவும் ஆக்கிவிடுகிறது. எனவே, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் அதிக பாட எல்லைகளை தொட்டு விட்டோம் என்றில்லாமல், அடிப்படை விஷயங்களை தெரியப்படுத்தியுள்ளோம் என்ற அளவில் இருக்க வேண்டும். இருக்கும் பாடத்திட்டத்தையே மறுபடியும் மொத்தமாக சேர்த்து அரைத்து தராமல், தனித்துவம் பேணப்பட வேண்டும். நான்கு வகை போர்டுகளிலும் உள்ள சிறந்த அம்சங்களை எடுத்து, மாணவர்களின் வயது, வகுப்பு, மனநிலைக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். மனப்பாட முறையை ஒழித்து, மாணவர்களின் சிந்தனை திறனை, ஆக்கத்திறனை ஊக்குவிப்பதாகவும், இதற்காக நிறைய செயல்பாடுகள் கொடுத்து, அதற்கு மதிப்பெண் தரும்படி அமைக்கலாம். தற்கால உலகியலை அறிய, விஞ்ஞான வளர்ச்சியை அறிய பொது அறிவுப் பாடம் ஒன்றை இணைக்க வேண்டும். தற்போதைய மாநிலக் கல்விப் பாடத்திட்டத்தில் இது இல்லை. கைத்தொழில் கல்வியை பள்ளி அளவிலேயே வளர்க்கும் விதமாக, பாடத்திட்டம் ஒன்று தயார் செய்தல் வேண்டும். இது மேல்நிலைக் கல்விக்கு பிறகு என்ன செய்யலாம் என்று திக்குத் தெரியாமல் விழிக்கும், செலவழிக்கும் ஆற்றல் அற்ற ஏழைக் குழந்தைகளுக்கு பெரிதும் உதவும். சுற்றுப்புறச் சூழல், சுகாதாரம், வளரும் நாடுகள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்தும், அதை காக்கவில்லையாயின் ஏற்படும் விளைவுகளையும் உணர்த்துவதாக புதிய பாடத்திட்டம் அமைய வேண்டும். நாட்டுப்பற்று, தேசப்பற்று, மனித நேயம், பிறருக்கு உதவும் மனப்பான்மை வளர்க்கும் விதமாகவும் புதிய பாடத்திட்டம் அமைதல் நலம்.
- தே.ஜெயானந்தம், பட்டதாரி ஆசிரியர், விழுப்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us