UPDATED : நவ 16, 2009 12:00 AM
ADDED : நவ 16, 2009 08:39 AM
சர்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தைகளின் பங்களிப்பை உறுதிப்படுத்த, இந்திய தபால் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தின தபால் தலை வெளியிடப்படுகிறது.
கடந்த 2003ம் ஆண்டு வரை ஏதாவது ஒரு ஓவியம் அல்லது புகைப்படம் அடங்கிய தபால் தலையை இந்திய தபால் துறை வெளியிட்டு வந்தது; கடந்த 2004 முதல் இந்திய அளவில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி நடத்தி, சிறந்த ஓவியத்தை தபால் தலையாக வெளியிடும் வழக் கத்தை அறிமுகம் செய்தது.
இந்த வகையில் 2007ம் ஆண்டு இந்தியா எனது கனவு என்ற தலைப்பில் நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு போட்டி நடத்தப் பட்டது. இதில், அந்தமான் போர்ட் பிளேயரை சேர்ந்த குமார் விஸ்வநாதன் எனும் மாணவன் வரைந்த ஓவியம், சிறந்த ஓவியமாக தேர்வு செய்யப் பட்டது. நிலவில் இருந்து பூமியை பார்ப்பது போன்ற கருத்தை மையமாக வைத்து இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தையொட்டி வெளியிடப் பட்ட தபால் தலையில் இவரது ஓவியம் இடம்பெற்றது.
இப் போட்டியில் தேர்வு பெற்றதற்காக குமார் விஸ்வநாதனுக்கு தபால் துறை 10 ஆயிரம் ரூபாய் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கி கவுரவித்துள்ளது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த குமார் விஸ்வநாதனுக்கு ஓவியம் உள்ளிட்ட கலைப் படிப்புகளில் மிகுந்த ஆர்வம் உண்டு.
இதையறிந்த அந்தமான் தீவு உற்பத்தி அமைப்பு எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் குமார் விஸ்வநாதனின் ஓவியக் கனவை நிறைவேற்றியுள் ளனர். இந்நிறுவனத்தின் உதவியுடன் தற்போது குமார் மத்திய பிரதேசம் குவாலியரில் உள்ள அரசு நுண்கலை பயிற்சி மையத்தில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்துள்ளார்.
இது பற்றி குமார் விஸ்வநாதன் கூறுகையில், எனது திறமையின் மீது நம்பிக்கை இருந்தது; அதே போல் பரிசும் கிடைத்து விட்டது. ஓவியங்களின் மூலம் பல நல்ல தகவல்களை கூற முடியும். நல்லவர்களின் உதவியால் எனது கனவு நிறைவேறி வருகிறது என்றார்.
படிப்பு செலவுக்கு இவரது தந்தை ராஜாராவ் மிகுந்த சிரமத்துக்கிடையே தற்போது மாதந் தோறும் 500 ரூபாய் மட்டும் அனுப்பி வருகிறார். படிப்பு, உணவு செலவுகளை சமாளிக்க இந்த பணம் போதாது என்பதால், மாலை நேரங்களில் சுவர்களில் படம் வரைந்து பணம் சம்பாதித்து வருகிறார் குமார் விஸ்வநாதன். இவரை பாராட்டியுள்ள ஓய்வு பெற்ற தபால் அலுவலர் ஹரிஹரன், படிப்புக்கு உதவவும் முன் வந்துள்ளார்.
