UPDATED : நவ 17, 2009 12:00 AM
ADDED : நவ 17, 2009 01:30 PM
தனியார் கல்வி நிறுவனங்கள் இதற்கு வலியுறுத்தி வருகின்றன; ஆனால், மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. அரசு துறைகளில் தகவல்களை பெற, தகவல் உரிமை சட்டம் கொண்டு வந்ததை போல, கல்வி உரிமை சட்டம் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
எல்லாருக்கும் நியாயமான கட்டணத்தில், அனைத்து கல்வியும் கிடைக்க வேண்டும்; கிராம மாணவர்களும் சிறப்பாக கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த அரசு தீவிரமாக உள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், அரசு பள்ளிகளில் சேர்ப்பதைவிட, தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதையே பெற்றோர் விரும்புகின்றனர்.
இதனால், நடுத்தர , ஏழைகளிடமும் கண்டபடி கல்விக்கட்டணம் வசூலிப்பதில் பல தனியார் பள்ளிகள் ஈடுபட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக அரசு பள்ளிகள் இயங்க முடியவில்லை; போதிய வசதிகளும் தர முடியவில்லை. கல்வி உரிமை சட்டம் கொண்டு வந்தால், அரசு பள்ளிகளில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரப்படும், என்று தெரிகிறது. இதற்கான திட்டங்களை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கொண்டு வர உள்ளது.
நெடுஞ்சாலைகள் போடும் திட்டங்களில் அரசு- தனியார் பங்களிப்பு உள்ளது போல, கல்வித்துறையிலும் அரசு- தனியார் பங்கு மூலம் திட்டங்களை உருவாக்கி, தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தலாம் என்பது அமைச்சகத்தின் முக்கிய திட்டம். இதன்படி, நாடு முழுவதும் உள்ள 13 லட்சம் அரசு ஆரம்ப, உயர்நிலைப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்து நடத்தலாமா என்று அரசு யோசித்தது. எந்த வகையில் தனியார் பங்கை நிர்ணயிப்பது என்று பரிசீலிக்கப்பட்டபோது தான், தனியார் கல்வி நிறுவனங்கள் வர்த்தக நோக்கில் தங்கள் பரிந்துரைகளை தர ஆரம்பித்தன.
அமெரிக்காவில் அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தருவதுடன், தேர்ச்சி சதவீதத்தையும் உயர்த்தி காட்டின; அதுபோல, இந்தியாவிலும் அமல்படுத்தலாம் என்று அமெரிக்க கல்வி நிறுவனங்களின் தூண்டுதலின் பேரில் இந்தியாவில் உள்ள சில தனியார் நிறுவனங்கள் வலியுறுத்தின.
அமெரிக்காவில், இதுபோன்ற பள்ளிகளை சார்ட்டர் பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இது போன்ற பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால், அமெரிக்காவில் இந்த பள்ளிகளால், மாணவர்கள் அடைந்த பலனை விட, தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்த லாபம் தான் அதிகம், என்று அங்குள்ள கல்வியாளர்களே குறைபட்டுள்ளனர்.
இதைச்சுட்டிக்காட்டிய கல்வியாளர்கள், இந்த விஷயத்தில் அரசு நிதானமாக செயல்படவேண்டும் என்று, கருத்து தெரிவித்துள்ளதால் மத்திய அரசு, சார்ட்டர் பள்ளிகள் விஷயத்தில் பெரிய அளவில் அவசரம் காட்டவில்லை. அமெரிக்கா போல முழு சுதந்திரத்துடன் அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டாம்; குறிப்பிட்ட இலக்கை எட்டுவதுடன், வசதிகளை தந்து, மாணவர்களில் 100சதவீத தேர்ச்சியை காட்ட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம், என்று யோசனை கூறப்பட்டது.
சார்ட்டர் பள்ளிகள் என்றால், தனியாரிடம் நீண்ட கால குத்தகைக்கு அரசு பள்ளிகளை விடுவது; ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அரசு தரும். மற்ற செலவுகளை தனியார் செய்ய வேண்டும். இந்தியாவுக்கு இந்த பள்ளிகள் முழு பலன்களை தருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதால், இப்போதைக்கு இந்த திட்டத்தை முடக்க மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
