ஒரே கிராமத்தை சேர்ந்த 42 பேர் போலீஸ் எழுத்து தேர்வில் தேர்வு
ஒரே கிராமத்தை சேர்ந்த 42 பேர் போலீஸ் எழுத்து தேர்வில் தேர்வு
UPDATED : நவ 26, 2009 12:00 AM
ADDED : நவ 26, 2009 09:50 AM
இரண்டாம் நிலை போலீசுக்கு 4ஆயிரம் பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 21-ல் நடந்தது. இதில் 20 ஆயிரத்து 157 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் நகராட்சி எல்லையையொட்டி அமைந்துள்ளது பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி. இங்கு தேர்வு எழுதிய 55 பேரில் 11 பெண்கள், 31 ஆண்கள் உட்பட 42 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை உடற்கல்வி ஆசிரியர் ராமநாதன், மாஸ்டர் கருணா ஆகியோர் நடத்தினர்.
இது குறித்து உடற்கல்வி ஆசிரியர் ராமநாதன் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக இளைஞர்களை போலீசாருக்கும், பல விளையாட்டு போட்டிகளுக்கும் தேர்வு செய்து அனுப்பி வருகிறேன். பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசும் பெற்றுள்ளேன். இதை சமூகசேவையாக செய்து வருகிறேன். எழுத்துதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள மைதானத்தில் பயிற்சி அளித்து வருகிறேன்.
தேர்வானவர்களுக்கு ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உட்பட பல பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. டிச.10ல் உடற்தகுதி தேர்வு நடக்கிறது. குறைந்த நாட்களே உள்ளதால் விரைந்து செயல்பட வேண்டியுள்ளது. பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 42 பேர் எழுத்து தேர்வில் தேர்வாகியுள்ளது எனக்கு பெருமையாக உள்ளது. இவர்கள் அனைவரும் உடற் தேர்விலும் தேர்ச்சி பெற கடுமையாக உழைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
