UPDATED : நவ 29, 2009 12:00 AM
ADDED : நவ 29, 2009 09:58 AM
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, கல்வியின் குறிக்கோள், மனிதனை பண் புள்ளவனாகவும், நன்னடத்தை உள்ளவனாகவும் உருவாக்குவதாகும்; பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியை மட்டும் ஏற்படுத்திக் கொடுப்பதல்ல என்று கூறுகிறார். பண்புகள், மதிப்பீடுகள் என்றும், மேம்பாடுகள் என்றும் குறிக்கப்படுகின்றன.
மனிதனுக்கு மதிப்பையும், மேன்மையையும் தருவதோடு, மனிதனுக்கு மனித இயல்பைத் தந்து, மனிதனாக அவனை அடையாளம் காட்டுபவை மனிதப் பண்புகளே. உளவியல், கல்வியல் அறிஞர்கள், 80 மதிப்பீடுகளை குறிப்பிடுகின்றனர். இவையனைத்தும், சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம் சை (வாய்மை, அறம், அமைதி, அன்பு, இன்னா செய்யாமை) என்ற ஐந்து தலையாய பண்புகளுக்குள் அடங்கும்.
இந்த ஐந்து உன்னத பண்புகளும் எல்லாவிதமான, இன, மொழி மக்களாலும் அடிப்படை பண்புகளாக போற்றப் படுகின்றன. இவை, காலத்தை வென்ற கலாசாரங்களின் உயிர் நாடியாகத் திகழ்ந்திருக்கின்றன. குழந்தைகளிடம் இயற்கையாகவே அமைந்துள்ள இப்பண்புகளை, அவர்கள் நடைமுறைப்படுத்த, கல்வி உதவ வேண்டும்.
மனிதனுடைய அறிவு மட்டும் வளர்ந் தாலும், அதனால் பயனில்லை. அறிவு என்பது தவறான வழியில் பயன்படுத்தப் பட்டால், அது அழிவைத் தரும் என்பதை, இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தப்படும் இளைஞர்களில், பலர் படித்தவர்கள். அவர்களுக்கு தொழில் நுட்ப, அறிவியலறிவுக்கு குறைவில்லை. ஆனால், உலகின் அமைதிக்கு அச்சுறுத்தலாக அல்லவா அவர்கள் இருக்கின்றனர்.
எல்லாரும் ஓரினம்; எல்லாரும் ஓர் குலம் என்ற சமத்துவ மனோபாவம், சிறுவயதிலேயே குழந்தைகள் மனதில் விதைக்கப்பட வேண்டும். சமத்துவம் என்பது பொருளாதார சமத்துவமல்ல, உலக மக்கள் யாவரும், உலகின் இசைவைக் காத்து நிற்கிற, தெய்வீகப் போற்றலின் குழந்தைகளே என்ற பேருண்மையை (சத்யம்) அவர்கள் அறியச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும், தான் தெய்வீகத்தன்மை பொருந்தியவன், உன்னதமான பண்புகளை செயல்படுத்தி வாழக்கூடிய ஆற்றல் உள்ளவன் என்ற அறிவைப் பெற, கல்வி உதவ வேண்டும். ஒருவன் தன்னை உயர் நிலைக்கு உயர்த்திக் கொள்ள, இறைவன் அளித்தப் பரிசு உடல். இந்த உடலை அத்தகைய அறவழியிலேயே (தர்மம்) பயன்படுத்த வேண்டும். நல்ல எண்ணத்தில் தொடங்கி, நல்ல சொல், வாய்மை, நல்ல செயல்களாகவும், உடல் திறன் வெளிப் படுத்தப்பட வேண்டும்.
தன்னைப் போல், பிறரை நேசிக்கிற, பிறர் துயர் கண்டு இரங்குகிற, பிரேமை (அன்பு) மனதில் நிறைய வேண்டும். பிறர் நலம் நாடுதல், பகிர்ந்து கொள் வது, தன்னலமற்ற சேவை ஆகியவற்றை கற்பிக்க வேண் டும். பிறருக்கு
தீங்கிழைக்கக் கூடிய எண்ணம், தவறான உணர்வுகளை களைய, சுயக்கட்டுப் பாட்டையும், புலன்களை புனிதமாக பயன்படுத்தவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
நன்னடத்தை மலரும் போது, உள்ளத்தில் அமைதி (சாந்தி) இயல் பாக அமைகிறது. எண்ணம், சொல், செயலால், பிறர்க்கின்னா செய்யாமை என்ற உயர்ந்த ஒழுக்கமே மனிதனை மகானாக உயர்த்துகிறது. அத்தகைய சிறந்த ஒழுக்கத் தை பெறுவதே, மனித வாழ்க்கையின் குறிக்கோள். இக் குறிக்கோளை நடைமுறைப்படுத்துவதே உண்மையான கல்வி.
மனிதன் அறவழியிலிருந்து தவறும் போது, அவனுள் சமநிலை கெடுகிறது. நோயும், அமைதியின்மையும் அவனை வாட்டுகின்றன. இயற்கை செல்வங்களை முறை தவறி சூறையாடும் போது, இயற்கையில் சமநிலை கெடுகிறது. காடுகளை அழிப்பதால், மழை பொய்க்கிறது. நிலச் சரிவுகள் ஏற்பட்டு நாசம் விளைகிறது. தண்ணீரையும், காற்றையும் மாசுபடுத்துவதால், பல நோய்கள் உண்டாகின்றன.
நற்பண்புகள் அடிப்படையாகக் கொண்டு, நன்னடத்தையை உருவாக்கும் கல்வி முறை தான் சிறந்த கல்வி; விழுக்கல்வி என்று பகவான் பாபா கூறுகிறார். ஸ்ரீசத்யசாய் நிறுவனங்கள் நடத்துகிற கல்விக் கூடங்களில், இத்தகைய கல்வியே கற்பிக்கப்படுகிறது.
அறிவியல் கல்வியான பள்ளிக் கல்வியோடு, ஆன்மிக் கல்வியான பண்புகளையும், குணநலன்களையும் சேர்த்து கற்பிக்கப்படுகிறது. கல்வியறிவு மனித உயர்திறனாக சிறப்பு பெறுகிறது என்பதற்கு, ஸ்ரீசத்யசாய் நிறுவனத்தின் மாணவர்கள் எடுத்துக்காட்டாக இருக்கின்றனர்.
இந்த விழுக்கல்வி, அயல் நாடுகளிலும் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மற்ற பள்ளிகளில் இடம் தர மறுக்கப்பட்ட மாணவர்களும், ஏழை - எளிய மாணவர்களும், சேரிவாழ் மக்களின் குழந்தைகளும் இப்பள்ளிக்கூடங்களில், அன்பு வழியில் கல்வி கற்பிக்கப் பட்டு, நல்லொழுக்கமுள்ள மாணவர் களாக உருவாகி இருக்கின்றனர். இந்த மாணவர்கள் முன்பு, பள்ளித் தேர்வுகளில் படு தோல்வி அடைந்து கொண்டிருந்த நிலைமாறி, பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 92 ஆக உயர்ந்திருக்கிறது.
ஸ்ரீசத்ய சாய் நிறுவனங்களில் பண்புக் கல்வி, எல்லாப் பாடங்களுடனும் இணைத்துக் கற்பிக்கப்படுகிறது. எந்த பாடமாக இருந்தாலும், அதில் கற்பிக்க வேண்டிய மதிப்பீடு அல்லது நற்பண்புகள் என்ன என்பதில் ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்துகின்றனர். ஆசிரியர்கள் பண்புகளை கடைப்பிடித்து, முன்உதாரணமாக, வாழ்ந்து மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். பகவான் சொல்கிற வழியில் ஒரு பொன்னான எதிர் காலத்தை உருவாக்குவதற்கு
தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர்.
பகவான் ஸ்ரீ சத்யசாயியின், பண்புகளின் அடிப்படையாகக் கொண்டு கல்வி என்ற மாளிகையில் சமுதாயம், அறவாழ்வு வாழ வகை செய்யும் கல்வியைப் பற்றி சிந்திப்பதும், நடைமுறைப்படுத்த வகை செய்வதும் எல்லாருக்கும் நலம் தரும். பண்புகளையும், ஒழுக்கத்தையும் வளர்ப்பதே கல்வியின் முடிவும் பயனும். அத்தகைய கல்வியே, மனிதனும், மனித சமுதாயமும் இழந்து தவிக்கிற நிம்மதி, மகிழ்ச்சியை மீட்டுத்தர முடியும்.
கல்வி சீரமைப்பு என்பதில் மனித மதிப்பீடுகளையும், ஒழுக்கத்தையும் வளர்ப்பது முதலிடம் பெற்றால், நாம் எல்லாரும் விழைகிற மனித மேம்பாடுகளும், மனித உயர்திறனும் மலர்ந்து மணம் வீசும்;புதியதோர் உலகம் செய்வோம் என்று பாரதிதாசன் கண்ட கனவு நனவாகும்.
-திருமதி. வெங்கடேசன்.
