மாணவர் சேர்க்கை: பள்ளிகளுக்கு அரசு கிடுக்கிப்பிடி!
மாணவர் சேர்க்கை: பள்ளிகளுக்கு அரசு கிடுக்கிப்பிடி!
UPDATED : டிச 01, 2009 12:00 AM
ADDED : டிச 01, 2009 12:37 PM
அ நிறம் | அளவு
எல்.கே.ஜி., முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர் சேர்க்கை பணிகளை, மே முதல் தேதி ஆரம்பித்து, 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கு முன்னதாக, மாணவர்களைச் சேர்த்தால் அது செல்லாது என்று, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல், பிளஸ் 1 சேர்க்கைப் பணிகளை, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
கல்வியாண்டு ஜூன் மாதம் துவங்கினாலும், அதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்து முடிப்பது, மெட்ரிக் பள்ளிகளின் வழக்கமாக இருக்கிறது. அரசின் விதிமுறைகள், அதிகாரிகளின் உத்தரவுகள் எதையுமே, மெட்ரிக் பள்ளிகள் கண்டு கொள்வது கிடையாது.
இத்தனை ஆண்டுகளாக விருப்பம் போல் இயங்கி வந்த மெட்ரிக் பள்ளிகள், சமச்சீர் கல்வித் திட்டத்தால் ஆட்டம் கண்டுள்ளன.கண்டபடி கட்டணம் வசூலித்ததால், கட்டணத்தை ஒழுங்குமுறைப்படுத்த தமிழக அரசு தனி சட்டம் கொண்டு வந்தது. ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைத்து, உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு, விரைவில் மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து, புதிய கட்டணங்களை நிர்ணயிக்க உள்ளது. அடுத்த கல்வியாண்டில் புதிய கட்டணம் அமலுக்கு வர உள்ள நிலையில், அவசரம், அவசரமாக இப்போதே மாணவர் சேர்க்கை பணிகளை துவக்கியிருப்பதைக் கண்டு, தமிழக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. அரசு குழு புதிய கட்டணத்தை நிர்ணயிப்பதற்குள், அடுத்த கல்வியாண்டிற்கான முழு கட்டணத்தையும் வசூல் செய்து முடிக்கும் திட்டத்துடன், பல பள்ளிகள் மாணவர் சேர்க்கைப் பணிகளை இப்போதே துவக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.இதைத் தொடர்ந்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி, அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: மாணவர் சேர்க்கை என்பது, பொதுவாக மே, ஜூன் மாதங்களில் தான் நடைபெறும். ஆனால், சில மெட்ரிக் பள்ளிகளில் நவம்பர் மாதத்தில் இருந்தே மாணவர் சேர்க்கை துவங்கிவிட்டதாக தெரிய வந்துள்ளது. பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு மதிப் பெண்ணை அடிப்படையாக வைத்து, பிளஸ் 1 சேர்க்கையை முடித்து, ஜனவரிக்குள் கட்டணத்தை வசூல் செய்யும் நோக்குடன் சில பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இது தவறான நடைமுறை.
* வகுப்பு வாரியாக சேர்க்கை செய்யப்பட உள்ள மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, பள்ளியின் தகவல் பலகையில் மே இரண்டாவது வாரத்தில் வெளியிட வேண்டும்.
* விண்ணப்பங்கள் வழங்குவது, அதை பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை, மே முதல் தேதியில் துவக்கி, 15ம் தேதிக் குள் முடிக்க வேண்டும். கேட் கும் அனைவருக்கும் விண்ணப் பம் வழங்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்காக, மாணவர்களுக்கோ, பெற்றோர்களுக்கோ நுழை வுத் தேர்வு நடத்தக் கூடாது.
* எல்.கே.ஜி., முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர் சேர்க்கையை, மே 16ம் தேதி துவக்கி, 30ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளலாம். இந்த கால கட்டத்திற்கு முன்னதாக மாணவர் சேர்க்கை நடந்தால், அது முறையானதாக கருத முடியாது. பிளஸ் 1 மாணவர் சேர்க்கை யை, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்னதாக, பிளஸ் 1 சேர்க்கை நடைபெறக் கூடாது.இவ்வாறு இயக்குனர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அரசின் தாமதம் பள்ளிகளுக்கு சாதகம்: தனியார் பள்ளிகளின் கட்டணங்களை ஒழுங்குமுறைப் படுத்த, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை நிர்வாகிகள் பெயர் பட்டியல் வெளியிடப்படவில்லை. முறையான அறிவிப்பை, முதல்வர் வெளியிடுவார் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசின் நடவடிக்கையை யூகித்து, தனியார் பள்ளிகள் உஷாராகி, இப்போதே மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளன. குழு அமைத்து, அதன்பின் ஆய்வு நடந்தி, புதிய கட்டணம் நிர்ணயிப்பதற்குள், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை முழு அளவில் நடத்தி முடித்து, கட்டணத்தையும் வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இப்பிரச்னையில், மாணவர்கள், பெற்றோர் நலனை கருத்தில் கொண்டு, இயக்குனர் அறிவிப்பை மீறி, மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், அதை ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என்று பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.
