UPDATED : டிச 03, 2009 12:00 AM
ADDED : டிச 03, 2009 12:03 PM
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 155 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மூன்று ஆசிரியர்கள் உள்ளனர். 6, 7ம் வகுப்புகளில் உள்ள 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.நகராட்சிப் பகுதிகளில் உள்ள மற்ற பள்ளிகளில் 150, 70 மாணவர்களுக்கு முறையே 3, 5 ஆசிரியர்கள் உள்ளனர். முள்ளிகிராம்பட்டு பள்ளிக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து, 10 நாட்களுக்கு முன் பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடந்தது. அதில் உடனடியாக கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். இல்லையெனில் டிசம்பர் 1ம் தேதி பள்ளியை பூட்ட முடிவு செய்தனர். ஆனால், அதிகாரிகள் அதனைப் பொருட்படுத்தவில்லை. காலக்கெடு முடிந்தும் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியரை நியமிக்காததால், ஆவேசமடைந்த பெற்றோர் மற்றும் சுய உதவிக்குழு பெண்கள், நேற்று காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்றனர். அங்கு வகுப்பறையில் இருந்த மாணவர்களை வெளியே அழைத்து வந்தனர். பின்னர், நான்கு ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களை சிறை வைத்து, பள்ளியை பூட்டினர். கூடுதல் ஆசிரியர் நியமிக்கும் வரை, உள்ளே இருக்கும் ஆசிரியர்களை வெளியே விடமாட்டோம் என அறிவித்தனர்.
இதுபற்றி தகவலறிந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் வெங்கடாசலம் விரைந்து வந்து போராட்டக் குழுவினரிடம் விரைவில் கூடுதல் ஆசிரியரை நியமிப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று போராட்டக்குழுவினர் பள்ளி பூட்டை திறந்து ஆசிரியர்களை விடுவித்தனர்.
