பொது நூலகத்துறை சார்பில் போட்டி: மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
பொது நூலகத்துறை சார்பில் போட்டி: மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
UPDATED : டிச 13, 2009 12:00 AM
ADDED : டிச 13, 2009 01:29 PM
படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், நமது உலகம் நூலகம் எனும் சிறப்பு இயக்கம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசால் செப்டம்பர் 16ம் தேதி சென்னையில் துவக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, சிறப்பு வாசகங்களுக்கான போட்டிகள் நடக்க உள்ளது. இதில், ஒன்பது முதல் ப்ளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். இதற்காக, என்னை செதுக்கிய நூல், படித்தேன் - உயர்ந்தேன், உலகிற் சிறந்த நூல்கள் என்ற மூன்று தலைப்பில் பேச்சுப்போட்டியும், நமது உலகம் நூலகம், அறிவால் உயர்வோம், நாளும் நூலகம் செல்வோம், கற்க வேண்டிய செந்தமிழ் நூல்கள் என்ற நான்கு தலைப்பில் கட்டுரைப்போட்டியும், நூலக விழிப்புணர்வு வாசகங்கள் போட்டியும் நடக்கிறது.
இவை நூலகங்கள் குறித்தும், புத்தகம் படித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய வாசகங்களை உருவாக்கும் போட்டியாகும். வட்ட அளவிலான தேர்வுப்போட்டி ஜனவரி எட்டாம் தேதியும், மாவட்ட அளவிலான போட்டி ஜனவரி 22லும், மாநில அளவிலான போட்டி ஜனவரி 29லும் நடக்கிறது. மாநில அளவில் நடக்கும் இறுதிப்போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் பொது நூலகத்துறை சார்பில் சிறப்பு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர். மூன்று போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மூவர் சிங்கப்பூர் சுற்றுலாவுக்கும், இரண்டாம் இடம் பிடிக்கும் மூவர் இந்திய சுற்றுலாவுக்கும், மூன்றாமிடம் பிடிக்கும் மூவர் தமிழக சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்லப்படுவர்.
இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் பது நூலகத்துறை நூலகங்களில் கட்டாயமாக உறுப்பினராக இருத்தல் அவசியம். ஒரு மாணவர் அல்லது மாணவி ஏதேனும் ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.போட்டிகளுக்கான நுழைவு விண்ணப்பங்கள் அரசு பொது நூலகத்துறையின் கீழ் செயல்படும் நூலகங்களில் உள்ளன. விண்ணப்பங்களை டிசம்பர் 20ம் தேதிக்குள் பெற்று, பூர்த்தி செய்து 20ம் தேதிக்குள் அருகாமையில் உள்ள நூலகத்தில் வழங்க வேண்டும். 20ம் தேதிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.கூடுதல் விபரங்களுக்கு, 04362 278147 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என பொது நூலக இயக்குனர் அறிவொளி கேட்டுக் கொண்டார்.
