நகர்ப்புற இளைஞர்களின் உடல் திறன் குறைந்து வருகிறது: கர்னல் வர்க்கீஸ்
நகர்ப்புற இளைஞர்களின் உடல் திறன் குறைந்து வருகிறது: கர்னல் வர்க்கீஸ்
UPDATED : டிச 13, 2009 12:00 AM
ADDED : டிச 13, 2009 01:44 PM
தேனியில் முதன் முறையாக ஜனவரி 5 முதல் 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட வந்த அவர் கூறியதாவது:
விவசாயம் சார்ந்த மாவட்டங்களில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்களை நடத்துவதையே நாங்கள் விரும்புகிறோம். இது போன்ற மாவட்டங்களில் மேலும் முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். நகர்புறங்களில் உள்ள இளைஞர்கள் சிறுவயதிலேயே திடகாத்திர தன்மையை இழந்து வருகின்றனர்.
அவர்களின் அன்றாட வாழக்கை சூழ்நிலை, உணவு பழக்க வழக்கங்கள், தேவையின்றி இரவு நேரங்களில் கண் விழித்து ஊர் சுற்றுவது, எந்நேரமும் மொபைல் பயன்படுத்துவது, போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவது, பெற்றோரின் திட்டமிட்ட வளர்ப்பு முறை இல்லாதது போன்ற காரணங்களால் இவர்கள் உடல் வலிமையை இழந்து வருகின்றனர்.
இதனால்தான் ராணுவம்,போலீஸ், வனத்துறை போன்ற சீருடை பணிகளுக்கு நடத்தப்படும் உடல் திறன் தேர்வில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 400 மீட்டர் தூரம் கூட அவர்களால் ஓட முடியவில்லை. அதற்குள் மூச்சு வாங்கி நிற்கின்றனர். இவர்களால் பின்னர் நடக்கும் தொடர் பயிற்சிகளில் தாக்கு பிடிக்க முடிவதில்லை. எனவே நகர்ப்புற இளைஞர்கள் தங்கள் உடல் திடகாத்திரத்தை பேணி காக்க வேண்டும்.
அதே நேரம் விவசாயம் சார்ந்த கிராமப்பகுதிகளில் வாழும் இளைஞர்கள் உடல் உழைப்பில் அதிகம் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களிடம் உடல் திடகாத்திரம் உள்ளது. அதே நேரம் தன்னம்பிக்கையும், மன வளர்ச்சி உள்ளவர்களாகவும் உள்ளனர். எனவேதான் விவசாயம் சார்ந்த மாவட்டங்களில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்களை நடத்த உள்ளோம் என்றார்.
