இசைக் கல்லூரிகளில் பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு
இசைக் கல்லூரிகளில் பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு
UPDATED : டிச 17, 2009 12:00 AM
ADDED : டிச 17, 2009 03:33 PM
அ நிறம் | அளவு
சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில், பயிற்றுவிக்கப்படும் பட்டயப் படிப்புகள் அனைத்தும், மூன்று ஆண்டுகால பட்டயப் படிப்புகளாகும். நட்டுவாங்கத்தில் ஓராண்டு பயிற்சி ஏதும் வழங்கப்படுவதில்லை.
நட்டுவாங்கத்தில், இரண்டு ஆண்டு பயிற்சிக்கு பின் நட்டுவாங்கக் கலைமணி பட்டயம் வழங்கப்படுகிறது. இசைக் கலைமணி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் இசை ஆசிரியர் பயிற்சியில் நேரடியாக சேர இயலாது. இசை ஆசிரியர் பயிற்சியில் சேருவதற்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு இசைக் கல்லூரிகளில் உள்ள பயிற்றுனர், விரிவுரையாளர், பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஆகிய பணியிடங்களுக்கு, தனித்தனியே பணி விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படியே, அவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள இதர கல்லூரிகளில் உள்ளது போல், விரிவுரையாளர் ஒருவர் பட்ட மேற்படிப்போ அல்லது முனைவர் பட்டமோ படித்திருந்தால் கூட, பணி மூப்பின் அடிப்படையில் தான் விரிவுரையாளரிலிருந்து பேராசிரியராகவோ, பேராசிரியரில் இருந்து கல்லூரி முதல்வராகவோ பதவி உயர்வு பெற இயலும்.
எனவே, பணியில் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர், தான் முதுநிலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருந்தால், சிறப்பு நிலையாகக் கொண்டு நேரடியாக பணி மூப்பினைத் தவிர்த்து பேராசிரியராகவோ, முதல்வராகவோ நியமனம் செய்திட விதிமுறைகளில் வழிவகை இல்லை. இவ்வாறு இறையன்பு தெரிவித்துள்ளார்.
