UPDATED : டிச 21, 2009 12:00 AM
ADDED : டிச 21, 2009 09:42 AM
இந்த ஆண்டு முதல் 10ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வுகளை ஒன்றாக இணைத்து நடத்த, அரசு ஏற்பாடுகளை செய்தது. இதனால், கல்வித்துறையினர் ஆவலுடன் தேர்வு அட்டவணையை எதிர்பார்த்தனர். கல்வி ஆண்டு ஜூன் மாதம், பள்ளி துவங்கும்போது பிளஸ்1 வகுப்புகளும் துவங்கி விடுவதால், 10ம் வகுப்பு தேர்வையே முதலில் நடத்த வேண்டும். கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள் துவங்குவது, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் வரை ஆகிறது. இதனால், பிளஸ் 2 தேர்வை தாமதமாகக் கூட துவக்கலாம், என பட்டதாரி ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
வரும் மார்ச் 1 முதல் 22ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வு நடைபெறும், என அரசு அறிவித்துவிட்டது. இந்த அட்டவணையில் 7 நாட்கள் தேர்வு நடக்காத நாட்கள் உள்ளன. (2 சனிக்கிழமைகள், புதன், வியாழன், வெள்ளி போன்ற நாட்கள் இதில் உள்ளன) இந்த இடைவெளியில் 10 ம் வகுப்பு தேர்வுகளை நடத்தலாம். இதனால், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை முன்னதாக முடிக்க வாய்ப்பு ஏற்படும்.
இல்லையெனில், மார்ச் 1 முதல் ஏப்ரல் மத்தி வரை பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுகள் நடப்பதால், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கூடுதல் காலம் தேர்வுப் பணி இருக்கும். இதை தவிர்க்க, 10ம் வகுப்பு தேர்வை, அந்தந்த பள்ளி உதவித் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கலாம். அவர்கள், இத்தேர்வை நடத்தி முடிப்பர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் தம்பித்துரை கூறியதாவது:
பொதுத் தேர்வுகளை உரிய காலத்தில் முடித்து, பள்ளி வேலை நாட்களுக்குள்ளாகவே விடைத்தாள்களையும் திருத்தி முடிக்க வேண்டும். அனைத்து வகுப்புகளையும் ஜூன் முதல் நாளிலேயே துவக்க வேண்டும் ,என கடந்து சில ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். வேலை நாட்களுக்குள் முடிக்காவிட்டால், அதற்குரிய ஈடுகட்டும் சம்பளம் தர வேண்டும். இல்லையெனில், வரும் ஆண்டில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்வோம். மார்ச்சில், பொதுத் தேர்வு துவங்கும் முன், இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும், என்றார்.
