UPDATED : ஜன 03, 2010 12:00 AM
ADDED : ஜன 03, 2010 06:20 PM
இந்தியாவில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும், அறிவியல் துறையை ஊக்குவிக்கவும், இந்திய அறிவியல் காங்கிரஸ் அமைப்பு துவக்கப்பட்டது. இந்த அமைப்பின் முதல் மாநாடு, 1914ம் ஆண்டு கோல்கட்டாவில் நடந்தது. ஆண்டுதோறும், இந்த அமைப்பின் சார்பில், வெவ்வேறு இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டு<, இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில், விருதுகள் வழங்கப்படுகின்றன. சர்வதேச அறிவியல் அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்குகள், இம்மாநாட்டில் இடம்பெறுவது வழக்கம். இளம் விஞ்ஞானிகளுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்த விருதில், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் அடங்கும்.
கடந்த 1947ம் ஆண்டு, நாடு சுதந்திரம் அடைந்தபோது, நடந்த 34வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு விருதுகள் வழங்கினார். கடந்த 96வது மாநாடு, ஷில்லாங்கில் நடந்தது. இந்த ஆண்டு, 97வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டை திருவனந்தபுரத்தில் ஜனவரி 3ம் தேதி துவக்கி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், ""இந்தியாவில் அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஆராய்ச்சிகளுக்கான உதவித்தொகை அதிகரிக்கவும், இதுசார்ந்த திட்டங்களை மேம்படுத்தவும் நிதி உதவி அளிக்க திட்டமிட்டு வருகிறது. இந்திய அறிவியலில் சில சமயங்களில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறப்படுவது துரதிஷ்டவசமாக உண்மையாகவே உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகள் சொந்தநாடு திரும்ப வேண்டும்&'&' என்றார்.
ஜனவரி 7ம் தேதி வரை நடைபெற உள்ள மாநாட்டில், தேசிய, சர்வதேச அறிவியல் அறிஞர்கள், அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் என 7,000க்கும் மேற்பட்ட அறிஞர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பிரிவில் உள்ள 14 வெவ்வேறு துறைகள் தொடர்பான கருத்தரங்குகள், விவாதங்கள், ஆய்வுக் கட்டுரைகள், கண்காட்சிகள் இடம்பெற உள்ளன. இந்த ஆண்டு மாநாட்டின் சிறப்பம்சமாக, குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் என்ற தனி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு மாநாட்டின் தலைவராக, இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் பொறுப்பேற்று நடத்துகிறார். 98வது மாநாட்டின் தலைவராக, லக்னோ பல்கலைக்கழக விலங்கியல் பிரிவுத் தலைவர் கே.சி.பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு, இளம் விஞ்ஞானிகளாக 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது விவரம்: ராகவேந்திரா - மைசூர் பல்கலைக்கழகம், மாகுவா குப்தா சவுத்ரி - நார்த் ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகம், பிரியங்கா சிங் - ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகம்,
ரவிகுமார் - கோல்கட்டா, சந்திரானி சிங் - ஐதராபாத், சுபிமால் கோஷ் - மும்பை, திவ்யா பாஜ்பாய் - ஜபல்பூர், கவுரவ் குப்தா - டில்லி, காந்தேஷ் பலானி - கான்பூர், அரபின் குமார் தே - கான்பூர், தேபாஷிஷ் போர் - கோல்கட்டா, சுனில் கட்டாரியா - டில்லி, சுனில்குமார் சிங் - வாரணாசி, சித்தார்த் திவாரி - டில்லி, சங்ராம் கேசரி லெங்கா - டில்லி.
கடந்த மாநாட்டில் பரிந்துரை செய்யப்பட்ட விஷயங்கள் குறித்தும், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டின் நிறைவு நாளான 7ம் தேதி, அறிவியல் காங்கிரசின் பொதுக்குழு கூட்டமும், நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
