UPDATED : ஜன 09, 2010 12:00 AM
ADDED : ஜன 09, 2010 01:34 PM
அ நிறம் | அளவு
கடந்த 1993ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதி, இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அதன் பின், 2002ல் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது, இந்திய அரசியல் சாசனத்தின் 86வது பிரிவு திருத்தப்பட்டு, இலவச கட்டாயக் கல்வி 6 வயதிலிருந்து 14 வயது குழந்தைகளுக்கு அளிப்பதற்கு வகை செய்யப்பட்டது. மேலும் அது, கல்வி என்பது ஒருவரின் அடிப்படை உரிமையாகும் என்றும் தெளிவுப்படுத்தியது.
பிறகு, 2004ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தை அமலாக்குவதற்கு ஆகும் செலவு குறித்து ஆராய இரண்டு அதிகாரம் மிக்க கமிட்டிகள் அமைக்கப்பட்டன. 2008 டிசம்பரில் ராஜ்யசபாவில் இலவச கட்டாயக் கல்வி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. 2009, ஜூலையில் பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் கட்டாயக் கல்வி உரிமை மசோதா (ஆர்.டி.இ.,) நிறைவேற்றப்பட்டது.அத்திட்டத்தை அமல்படுத்த ஆகும் செலவு ஒரு லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டது.இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான பொது நல வழக்கு விசாரணையின் போது பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு குறிப்பிடுகையில், வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் இந்த சட்டம் அமலாக்கப்படும் என தெரிவித்துள்ளது.
