உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை குறைவு: அமைச்சர் சிதம்பரம்
உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை குறைவு: அமைச்சர் சிதம்பரம்
UPDATED : ஜன 10, 2010 12:00 AM
ADDED : ஜன 10, 2010 10:52 AM
காரைக்குடி அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் ராமசாமி வரவேற்றார். தமிழக கவர்னர் பர்னாலா, 145 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகனுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:
ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வி பயனை இப்பல்கலை, 24 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இவர்களில் பலர் கிராமங்களை சேர்ந்தவர்கள். அனைத்து பல்கலை.,களும், உயர்கல்வி நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்பட்டாலும் கூட, பள்ளி கல்விக்கு பின், 11 முதல் 12 சதவீத மாணவர் தான் உயர்கல்வி பெறுகின்றனர்.
பள்ளி கல்வியை பாதியில் நிறுத்திய 50 சதவீத மாணவர்களை சேர்த்து கணக்கிட்டால், இது ஆறு சதவீதமாக குறையும். சமுதாயத்தை வடிவமைக்கும் சக்தி மாணவர்களுக்கு உண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளில், நாம் அணு ஆற்றல் நாடாக அங்கீகரிக்கப்பட்டோம். கலப்பு மரபணுக்கள் கொண்ட பருத்தி வகையை உருவாக்கினோம். இந்தியாவை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர, பட்டம் பெற்ற ஒவ்வொரு இளைஞரும் உறுதி கொள்ள வேண்டும். இவ்வாறு சிதம்பரம் பேசினார்.
மொத்தம் 31 ஆயிரத்து 727 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. பதிவாளர் செண்பக வல்லி, தேர்வாணையர் மாணிக்க வாசகம், ஆட்சிக்குழு உறுப்பினர் உமையாள் ராமநாதன் பங்கேற்றனர்.
