கல்வியில் பின்தங்கிய நிலையில் கிராம பெண்கள்: மத்திய அமைச்சர்
கல்வியில் பின்தங்கிய நிலையில் கிராம பெண்கள்: மத்திய அமைச்சர்
UPDATED : ஜன 11, 2010 12:00 AM
ADDED : ஜன 11, 2010 09:49 AM
திருச்சியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் மண்டல மாநாடு நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து மத்திய இணையமைச்சர் நெப்போலியன் பேசியதாவது: சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் முடியும் என்ற சிந்தனை வேண்டும். எல்லோரும் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் எல்லோரும் ஜெயிப்பதில்லை. வெற்றி, தோல்வியை சரிசமமாக பார்க்கும் பக்குவத்தை அனைவரும் வளர்த்துக் கொள்ளவேண்டும். வெற்றி இருந்தால் சந்தோஷம் வரும் என்று சொல்வார்கள். ஆனால் சந்தோஷம் இருந்தால் வெற்றி தானாக வரும்.உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். அப்போது தான் எண்ணங்கள் ஆரோக்கியமாக தோன்றும். இது குடும்பத்தையும், நாட்டையும் மேம்படுத்தும்.
எழுத்தறிவித்து இறைவன் ஆவோம் என்ற லயன்ஸ் கிளப்பின் வாசகம் உயரிய எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாய் அமைந்துள்ளது. நாட்டில் கிராமப்புற பெண்கள் தான் கல்வியறிவில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களுக்கு கல்வியறிவு புகட்ட லயன்ஸ் சங்கங்கள் முன்வரவேண்டும்.
நான் அமைச்சராக இருக்கும் மத்திய அரசின் துறையான சமூக நீதி மற்றும் அதிகார பகிர்வு மூலம் தான் பெண்கள், உடல் ஊனமுற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்ட வருகிறது. சமுதாயத்தில் பெண்கள் படித்தால் குடும்பம், வருங்கால சந்ததி நன்றாக இருக்கும். ஒருவருக்கு சொத்து எவ்வளவு இருந்தாலும் அது நிரந்தரமில்லை. கல்விச் செல்வம் மட்டுமே நிரந்தரமானது.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி நாட்டில் இரண்டு கோடியே 19 லட்சம் உடல் ஊனமுற்றோர் இருந்துள்ளனர். இதில் பார்வையற்றோர் மட்டும் ஒரு கோடியே ஆறு லட்சம் பேர். ஆனால் ஆண்டுக்கு 30 ஆயிரம் கண்கள் மட்டுமே நமக்கு தானமாக கிடைக்கிறது. ஆகையால் இறந்தபின் உடல் தானம், கண்தானமும், உயிரோடு இருக்கும் போது ரத்ததானமும் செய்யவேண்டும். இவை எல்லாவற்றையும் விட அன்னதானம் சிறந்தது என்றார். மண்டல தலைவர் நசுருதீன், ஆளுனர் கண்ணன், பேராசிரியர் ஞானசம்பந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
