பல்கலையில் சேர சான்றிதழ்கள் எதற்கு?: சாம் பிட்ரோடா!
பல்கலையில் சேர சான்றிதழ்கள் எதற்கு?: சாம் பிட்ரோடா!
UPDATED : ஜன 18, 2010 12:00 AM
ADDED : ஜன 18, 2010 11:25 AM
ஒரிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பல்கலைக் கழக விழாவில் கலந்து கொண்டு சாம் பிட்ரோடா பேசியதாவது:தற்போதைய காலம், தகவல் தொழில் நுட்ப காலம். இந்த காலத்தில் நூலகத்துக்கு போக வேண்டிய அவசியம் இல்லாமல், இன்டெர்நெட் மூலம் பல தகவல்களை அறியக் கூடிய வசதி வந்து விட்டது. எனவே, எல்லாவித தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி, கல்வியை போதிக்க வேண்டும்.
தகவல் தொழில் நுட்ப முறை மாறும் போது, அதற்கேற்ப அந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கல்வியையும், தகவல் தொடர்பு முறையையும் மேம்படுத்த வேண்டும். அமெரிக்க பாணியிலான நுகர்வோர் பாதுகாப்பு முறை, இனி பலன் அளிக்காது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏழைகளுக்காக உழைப்பதற்கு குறைந்த சம்பளத்தில் பணிபுரிய நிறைய பேர் தேவைப்படுகின்றனர். அப்போது தான் நம்நாட்டில் உள்ள சவால்களை சந்திக்க முடியும். அமெரிக்க பாணியிலான நுகர்வோர் முறை, இந்த விஷயத்துக்கு ஒத்து வராது.
பல்கலைக் கழகத்தில் சேர, போட்டோ, கெசட்டட் அலுவலரின் கையொப்பம் இட்ட சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகலுடன் விண்ணப்பிக்கும் முறை மாற வேண்டும். கம்ப்யூட்டரில் உள்ள மவுசில் கிளிக் செய்தவுடன், பல்கலைக் கழகத்தில் இடம் கிடைக்கும் நிலைமை ஏற்பட வேண்டும். நம்நாட்டில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. தொழில் நுட்பம் மூலம் வளர்ச்சி அடைவதற்கும், காந்திய சிந்தனைகளுக்கும் முரண்பாடு ஏதும் இல்லை.இவ்வாறு சாம் பிட்ரோடா கூறினார்.
