உஸ்மானியா மாணவர்கள் தேர்வெழுதவில்லை : ஆந்திராவில் பதட்டம்
உஸ்மானியா மாணவர்கள் தேர்வெழுதவில்லை : ஆந்திராவில் பதட்டம்
UPDATED : ஜன 20, 2010 12:00 AM
ADDED : ஜன 20, 2010 03:10 PM
உஸ்மானியா பல் கலை மாணவர்கள், தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கினர்.
ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய, தெலுங்கானா கூட்டு நடவடிக்கை போராட்டக் குழு, தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக, உஸ்மானியா பல்கலை மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருந்தாலும், தெலுங்கானா விஷயத்தில், மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. வரும் 28ம் தேதிக்குள், இந்த விஷயத்தில் மத்திய அரசு, இறுதி முடிவை தெரிவிக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப் படுத் தப்போவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, உப்பல் என்ற இடத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில், எம்.சி.ஏ., இறுதியாண்டு படித்து வந்த வேணுகோபால் ரெட்டி (23) என்ற மாணவர், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, உஸ்மானியா பல்கலை வளாகத்தில், நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தாகூர் ஆடிட்டோரியம் அருகே கிடந்த அவரது உடலை, மற்ற மாணவர்கள் கண்டுபிடித்தனர். தெலுங்கானா மாநிலம் அமைப்பதை, மத்திய அரசு தாமதப்படுத்துவதை கண்டித்து, தற்கொலை செய்து கொள்வதாக, அவர் எழுதி வைத்திருந்த சில குறிப்புகளையும் மாணவர்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து, ஏராளமான மாணவர்கள் அங்கு திரண்டனர். நேரம் செல்லச், செல்ல மாணவர்களின் கூட்டம் அதிகரித்தது. உஸ்மானியா பல்கலையின் மையப் பகுதிக்கு, இறந்த மாணவரின் உடலை கொண்டு வந்து, மற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, உஸ் மானியா பல்கலை மாணவர்கள், தேர்வை புறக்கணித்துவிட்டு, போராட்டத்தில் பங்கேற்றனர். சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
மாணவர்கள் தரப்பில் கூறியதாவது: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் விவகாரத்தில், மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதை கண்டித்து, மாணவர் வேணுகோபால் தற்கொலை செய்துள்ளார். இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் குடும்பத்துக்கு ஆந்திர அரசு, 15 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். அவரின் குடும் பத்தினருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாணவர்கள் கூறினார். மாணவர் வேணுகோபால் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, ஐதராபாத் உள்ளிட்ட தெலுங்கானா பகுதியில், மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார், பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகம் தொடர்பாக, அனைத்து மாநில கலெக்டர்களுடன் ஆந்திர முதல்வர் ரோசய்யா ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், மின்சாரம், வறட்சி, வெள்ளம், பொது வினியோக திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. முதல்வர் ரோசய்யா மீண்டும் மாநிலத்தில் இயல்பு நிலை ஏற்படுத்த விரும் பும் போது, இப்பதட்டம், அப்பணிகளுக்கு முட்டுக் கட்டையாக அமையுமோ என்ற கருத்து எழுந் திருக்கிறது.
