விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர் போராட்டம் கூடாது
விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர் போராட்டம் கூடாது
UPDATED : ஜன 24, 2010 12:00 AM
ADDED : ஜன 24, 2010 11:32 AM
அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள மாணவர்களில் பலர், தாங்கள் கணக்கிட்ட மதிப்பெண்கள் கிடைக்காததால் அதிர்ச்சியடைகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில், விடைத் தாள்களை திருத்தும் ஆசிரியர்களின் அலட்சியமே, இந்த அவலத்திற்கு காரணமாக உள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 50 முதல் 60 மையங்களில் நடக்கின்றன. 200 முதல் 300 ஆசிரியர்கள் ஒவ்வொரு மையத்திலும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். அனுபவம் வாய்ந்த, பல ஆண்டுகள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், இப்பணிக்கு அழைக்கப்படுகின்றனர்.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவதால், அவர்களின் எண்ண ஓட்டம் நிச்சயம் பாதிக்கப்படும். தங்களின் பணியில் முழுமையாக கவனம் செலுத்த முடியாது. இதனால், சிறந்த விடை அளித்த மாணவர்கள் கூட, குறைவான மதிப்பெண்களை பெற வேண்டியுள்ளது.
இதற்கு கடந்த காலங்களில் பல உதாரணங்கள் உள்ளன. மேட்டூரை சேர்ந்த மாணவி பிரதீபா, தேர்வில் ஆயிரத்து 176 மதிப்பெண்கள் பெற்றார்.
விடைத்தாள் நகலை வாங்கி பார்த்தபோது, ஐந்து மார்க்குகள் கூட்டலில் விடுபட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டிய பின், தேர்வுத்துறை ஐந்து மதிப்பெண் கூடுதலாக கொடுத்தது. மாநில அளவில் அந்த மாணவிக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.
ஊத்தங்கரையை சேர்ந்த பாலமுருகன் மறு கூட்டல் மூலமாக ஆயிரத்து 184 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்தார். இதனால் ஏற்கெனவே வெளியான மாநில அளவிலான ரேங்க் பட்டியல் மாறியது. தவறுகள் பின்னர் சரி செய்யப்பட்டாலும், மாணவ, மாணவியர் மன உளைச்சலுக்கு உள்ளாயினர். விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் எண்ணிக்கை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என்பது அவர்களின் உரிமை. சில நேரங்களில் அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவையாக கூட இருக்கலாம். ஆனால், அவர்களின் போராட்டக் களமாக விடைத்தாள் திருத்தும் மையங்களை தேர்வு செய்வதுதான் சரியல்ல. மற்ற நேரங்களில் அவர்கள் போராட்டங்களை அறிவித்து, நடத்தலாம். விடைத்தாள் திருத்தும் நேரத்தில் போராட்டங்கள் நடத்துவதன் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுத்து, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பது சுயநலத்தின் வெளிப்பாடாகத்தான் மக்கள் கருதுவர்.
மன அமைதியுடன், மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய விடைத்தாள் திருத்தும் மையங்களில், போராட்ட குணத்துடன் பணி புரிவது சரியாக வராது. இது, உளவியல் ரீதியான பிரச்னை என்பதால், ஆசிரியர்கள் இதை மறுக்கவும் முடியாது. எனவே, விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஆசிரியர்கள் போராட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். சமீபத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், தமிழகத்தின் பல இடங்களில் செயல்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிபுரிந்த ஆசிரியர்கள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இந்த போராட்டங்களால் ஆசிரியர்கள் பலன் பெற்றிருக்கலாம். ஆனால், மிகச் சிறந்த பல மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களை தங்கள் குழந்தைகள் போல் பாவிக்க வேண்டிய ஆசிரியர்களே, அவர்களின் பாதிப்பிற்கு காரணமாக இருப்பது சரியாகாது. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிபுரியும் போது ஆசிரியர்கள் போராட்டங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சேலையூரில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் கழகத்தின் சார்பில், தலைமை செயலகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பள்ளிக் கல்வித்துறையில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு அரசுத் தேர்வுகள் விடைத்தாள் திருத்தும் போது ஆசிரியர்கள், தங்கள் பணியாற்றிய 200 நாட்களை விடுத்து, தேர்வுத்தாள் திருத்தும் 10 நாட்களில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்களை நடத்துகின்றனர்.
இதனால், முழு மனநிலையில் அவர்கள் விடைத்தாள் திருத்த வாய்ப்பு இல்லை. பல்வேறு பிரச்னைகள் சம்பவங்கள், அடுத்த நாள் செயல்பாடுகள் குறித்த நிலையிலேயே விடைத்தாள்களை திருத்துவார்கள் என்பது மனவியல் அறிந்த அனைவரும் ஏற்றுக் கொள்ளும் உண்மை. எனவே, இப்போராட்டங்கள் இனி நடைபெறாமல் இருக்க தடை ஆணை விதித்திட வேண்டுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
