UPDATED : ஜன 30, 2010 12:00 AM
ADDED : ஜன 30, 2010 12:55 PM
அ நிறம் | அளவு
இச்சம்பவம், ஓட்டேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டேரி, மங்களபுரி, நான்காவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார்.
இவரின் மனைவி எழிலரசி. இவர்களது குழந்தைகள் இளவரசி(10),மதுமிதா(8) மற்றும் சஞ்சய்(5). வீட்டிற்கு அருகில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் இளவரசி நான்காம் வகுப்பும், மதுமிதா மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த மாதம் 14ம் தேதி, மதுமிதா பள்ளிக்கு சென்றார். அன்று மூன்றாம் வகுப்பு ஆசிரியை பணி காரணமாக வெளியில் சென்றிருந்தார். முதல் வகுப்பு ஆசிரியை ரேணுகா என்பவர், வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தார். குறும்பு செய்ததாக கூறி, மதுமிதாவை ரேணுகா அடித்துள்ளார்.
அப்போது ரேணுகாவின் கையில் இருந்த கண்ணாடி வளையல் உடைந்து, மதுமிதாவின் வலது கண்ணுக்குள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால், மதுமிதாவின் கண்ணில் இருந்து ரத்தம் வழிந்தது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கண்ணை குணப்படுத்த ஆகும் செலவை ஏற்பதாக, ஆசிரியை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கூறியபடி எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மாணவியின் தாய் எழிலரசி, போலீசில் புகார் செய்துள்ளார்.
இது குறித்து எழிலரசி கூறியதாவது: கடந்த மாதம் 14ம் தேதி, பள்ளி சென்ற எனது மகளுக்கு கண்ணில் அடிபட்டு விட்டதாகவும்; மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளதாகவும் தகவல் கிடைத்தது. மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, மகளின் வலது கண்ணில் இருந்து ரத்தம் வழிந்தது. விசாரித்த போது, முதல் வகுப்பு ஆசிரியை ரேணுகா அடித்தபோது, அவரின் கையில் இருந்த கண்ணாடி வளையல் உடைந்து கண்ணில் விழுந்ததாக தெரிவித்தார். பரிசோதனையில் மதுமிதாவின் கண்ணின் கருவிழி கிழிந்தது தெரிந்தது.
அங்கு, முதலுதவி பெற்ற பின் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் அனுமதித்தோம். முதல் கட்டமாக எனது மகளின் கண்ணில் இருந்த வளையல் துண்டு எடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இரண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்தாலும் பார்வை கிடைப்பது மிகவும் கடினம் எனவும் அச்சுறுத்துகின்றனர். முதலில் ஆசிரியை ரேணுகா, கண் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக கூறினார்.
தற்போது, எனது மகள் கதவில் மோதிக் கொண்டதால் தான், கண்ணில் அடிபட்டதாக மாற்றி கூறுகிறார். எனவே தான் போலீசில் புகார் செய்தேன். எனக்கு பணம் முக்கியம் இல்லை. மறுபடி எனது மகளுக்கு பார்வை கிடைக்க வேண்டும். இவ்வாறு எழிலரசி கூறினார்.
ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல் ஸ்டான்லி ஆனந்த், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். ஆசிரியை அடித்ததால், மாணவி கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரால் ஓட்டேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
