UPDATED : டிச 18, 2023 12:00 AM
ADDED : டிச 18, 2023 09:59 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு, புத்தாக்கப்பயிற்சி மற்றும் ஆய்வுக்கூட்டம் நடந்தது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி, ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி மற்றும் மாணவர்கள் தேர்ச்சி முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர் கேசவகுமார் தலைமை வகித்து, மாணவர்கள் தேர்ச்சி அடைவில் முன்னேற்றம் குறித்தும், பள்ளிகளை தனித்தனியாக ஆய்வு செய்து, மாணவர்கள் முன்னேற்றம் அடைய தேவையான வழிமுறைகள் குறித்தும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.கருத்தாளர்கள், மாணவர்களை சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி அடைய தேவையான வழிமுறைகள் குறித்து விவாதித்தனர். அதில், 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆண்டிபாளையம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி, பள்ளி துணை ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது. திங்கள், தமிழ், செவ்வாய், ஆங்கிலம், புதன் கிழமை கணிதம், வியாழன் அறிவியல் என பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதன் நோக்கம், அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு பயத்தை போக்கி இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு வர வைப்பது; பத்தாம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திலும் மதிப்பெண்களை அதிகமாக பெற வைப்பது குறித்தும்; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை முதன்மை கல்வி மாவட்டமாக மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர் முன்னேற்றம் குறித்தும், ஆய்வு செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
