‘பிளஸ் 1 மாணவர்களுக்கு இம்மாதத்திற்குள் இலவச சைக்கிள்’
‘பிளஸ் 1 மாணவர்களுக்கு இம்மாதத்திற்குள் இலவச சைக்கிள்’
UPDATED : செப் 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: “தமிழகத்தில் 127 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும். இம்மாதம் இறுதிக்குள் அனைத்து பிளஸ் 1 மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டுவிடும்,” என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள 10 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில், அமைச்சர் ஸ்டாலின் சைக்கிள்களை வழங்கிப் பேசியதாவது:
பிளஸ் 1 படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அரசு ஆண்டு தோறும் இலவச சைக்கிள்களை வழங்கி வருகிறது.
அதன்படி 2008-09 ஆண்டு தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்து 38 ஆயிரத்து 900 மாணவர்களுக்கும், இரண்டு லட்சத்து 83 ஆயிரத்து 750 மாணவிகளுக்கும் என, ஐந்து லட்சத்து 22 ஆயிரத்து 650 மாணவ, மாணவிகளுக்கு 127 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் இலவச சைக்கிள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 12 ஆயிரத்து 831 மாணவர்கள், 17 ஆயிரத்து 382 மாணவிகள் என 30 ஆயிரத்து 213 மாணவ, மாணவிகளுக்கு ஏழு கோடியே 29 லட்சம் செலவில் இலவச சைக்கிள்கள் வழங் கப்பட உள்ளது.
ஆயிரம் விளக்கு தொகுதியில் மட்டும் 340 மாணவிகள் உட்பட ஆயிரத்து 62 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இம்மாதத்திற்குள் அனைத்து பிளஸ் 1 மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.