நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
UPDATED : ஜூலை 21, 2025 12:00 AM
ADDED : ஜூலை 21, 2025 08:50 AM
 நெல்லை: 
நெல்லையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், பள்ளி பஸ்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது.
வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவனை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. மேலும், பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனால், மாணவன், பள்ளிக்கு வரும் போது, பூச்சி மருந்து சாப்பிட்ட நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவன் உடலை வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவன் பயின்ற பள்ளியின் இரு பஸ்கள் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதனால், இரு பஸ்களும் தீக்கிரையாகின. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாணவன் தற்கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியும் அளித்தனர். இதனால், அவர்கள் கலைந்து சென்றனர்.
வீரவநல்லூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

