சாதித்தோம் 10ம் வகுப்பில்; சாதித்து காட்டுவோம் பிளஸ்2 வில்
சாதித்தோம் 10ம் வகுப்பில்; சாதித்து காட்டுவோம் பிளஸ்2 வில்
UPDATED : நவ 17, 2009 12:00 AM
ADDED : நவ 17, 2009 01:08 PM
ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆசிரியர் பணியில் அனுபவம் பெற்ற ஒவ்வொரு துறையின் ஆசிரியர்களின் அட்வைஸ் களை அமைதியாக அமர்ந்து தெரிந்துகொண்டனர். பொதுத்தேர்வில் பிளஸ்2 அறிவியல் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் கூறிய டிப்ஸ் வருமாறு:
ஜனார்த்தனன் (தமிழ், ஆர்.வி.ஜி., மேல் நிலைப் பள்ளி, குறிச்சிக் கோட்டை): தமிழ் முதல் தாளில் மனப்பாட பகுதி மிக முக்கியம். படிப்பதோடு எழுதி பார்ப்பது மிக அவசியம். எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுத வேண்டும். திருக்குறள் பகுதியை படித்தால் 22 மதிப்பெண்கள் உறுதியாக கிடைக்கும். இரண்டாம் தாளில் பெரிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது ஒவ்வொரு பாயிண்டாக எழுத வேண்டும். கதைப்பகுதி பதில்களுக்கு கதையின் ஆசிரியர் பெயர் குறிப்பிட வேண்டும். கட்டுரைகள் 3 பக்கம் மிகையாமல் எழுத வேண்டும். பாடல் பகுதி பதில்களுக்கு தலைப்பிட்டு பாடல் ஆசிரியர் பற்றிய குறிப்புகளை எழுதலாம்.
இலக்கண பகுதி வார்த்தைகளை கவனமுடன் பிரித்து பார்த்து எழுத வேண்டும். இலக்கிய நயம் பகுதியில் தலைப்பு, முன்னுரை, திரண்ட கருத்து, மையக்கருத்து, முடிவுரை என தலைப்பிட்டு எழுத வேண்டும். வகுப்பறைகளில் படிக்கும்போது பாடங்களை கவனிக்க வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும். சிந்தித்து செயல்பட்டால், தேர்வை கண்டு அச்சப்படத்தேவையில்லை. கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படித்தால் சாதனை பெறலாம்.
பத்ரி நாராயணன் ( ஆங்கிலம். அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம்):
ஆங்கில மொழியில் அணுகும் விதத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொடர் எழுத் துப்பயிற்சி வெற்றியை கொடுக்கும். தினமும் படிப்பதுடன் பாடங்களை எழுதி பார்க்க வேண்டும். ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கவும். வீட்டில் இருக்கும் போது ஆங்கில பாடத்தை நீங்களாகவே தேர்வு வைத்து எழுதி பாருங்கள்; நீங்களே புத்தகத்தை வைத்து திருத்தி தவறை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.
இதுபோன்ற பயிற்சியினால், பொதுத்தேர்வில், அச்சமின்றி ஆங்கிலத் தேர்வை எதிர்கொள்வதுடன், நல்ல மதிப்பெண் பெற முடியும். புத்தகத்தில் பாடங்களுக்கு பின் பகுதியிலுள்ள எதிர்ச்சொல் மற்றும் அருஞ்சொற் பொருள் உள்ளிட்ட ஒரு மதிப்பெண் வினாக்களை நன்றாக படித்துக்கொள்ளவும்.கட்டுரை வினாக்களுக்கு தலைப்பு மற்றும் உட்தலைப்புகளிட்டு எழுத வேண்டும். வினாத்தாளை நன்றாக படித்து நிதானமாக விடையளிக்கவும். அனைத்து வினாக்களையும் விடையளிக்க வேண்டும். முயற்சி செய்தவன் தோற்றதுமில்லை; முயலாதவன் வெற்றி பெற்றதுமில்லை; எனவே விடா முயற்சி செய்தால் ஆங்கிலத்தில் முழு மதிப்பெண் பெறலாம்.
சுப்பிரமணியன் (வேதியியல், எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, உடுமலை) :
வேதியியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு முக்கியத்துவம் அளித்து கவனமுடன் படிக்க வேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு புத்தகத்தில் உள்ள வினாக்களை முழுமையாக படித்தாலே போதும்.
வேதியியல் பாடத்தில், ஆர்கானிக் வேதியியல், இன்னர்ஆர்கானிக் வேதியியல், பிசிக்கல் வேதியியல் பிரிவுகளுக்கு சமமாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. வினாத் தாளை சரியாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
வேதியலில், கணக்குகளை தேர்வு செய்யும் போது கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். வேதியியல் செய்முறைகளுக்கு விளக்கமளிக்கும் கேள்விகளுக்கு வழிமுறைகளை சரியாக எழுத வேண்டும். முக்கிய கருத்துகளை சுட்டிக்காட்டினால், கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். படம் உள்ள வினாக்களுக்கு கண்டிப்பாக படம் வரைந்ததால்தான், முழு மதிப்பெண் கிடைக்கும். அலகுகள் சரியாக குறிப்பிட்டால், ஒரு மதிப்பெண் வழங்கப்படும். வார்த்தைக்கு வார்த்தை இடமிட்டு அழகாக எழுத வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது. கணக்கு சூத்திரங்களை தனியாக எழுதி, மனப்பாடம் செய்து கொண்டால், வேதியியலில் சென்டம் அடிக்க முடியும்.
கீதா ( கணிதம், அரசு மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி): மனப்பாடம் செய்வதை விட தினமும் பார்த்தாலே, பார்முலாக்கள் அனைத் தும் மனதில் எளிதாக பதியும். 2,4,5,7,8 ஆகிய பாடங்களை முதல் பிரிவாகவும், மற்ற பாடங்களை இரண் டாம் பிரிவாகவும் பிரித்து கொள்ள வேண்டும். முதல் பிரிவிலுள்ள பாடங்களிலிருந்து 10 மதிப்பெண் வினாக்களும், இரண்டாம் பகுதியில், ஆறு மதிப்பெண் வினாக்களும் கேட்கப்படும். எனவே, பாடங்களை பிரித்து முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.
கணக்குகளை அடிக்கடி போட்டுப்பார்த்து பயிற்சி பெற்றால், பிழையின்றி எளிதாக விடை கண்டுபிடிக்க முடியும். எழுத்துபயிற்சி கணிதத்தில் அவசியம். பள்ளிகளில் நடைபெறும் தேர்வினை தவறாமல் எழுத வேண்டும். கணக்கில் பார்முலா, தேற்றம் என்று படிப்படியாக விடையளிக்க வேண்டும்.
முதலில் தேர்வில் பத்து மதிப்பெண், ஆறு மதிப்பெண் கடைசியாக ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கலாம். கணிதப்பாடத்தில் ஸ்டெப்ஸ்க்கு மதிப்பெண் உண்டு. தேர்வில், கணக்குகளின் கூட்டு மதிப்புகளை போட்டு பார்க்க தனித்தாள் வாங்காமல், விடைத்தாளின் வலது ஒரத்தில் மார்ஜின் போட்டு, மதிப்புகளை போட்டு பார்க்கலாம். கேட்கப்பட்டதை வினாக்களுக்கு மட்டும் பதிலளித்தால் மட்டும் போதும். தன்னம்பிக்கையுடன் சென்றால், தேர்வில் வெற்றி பெறலாம்.
பாலகிருஷ்ணன் ( தாவரவியல், எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி, கணியூர்):
புத்தகத்தின் பின் பகுதியிலு<ள்ள வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பதிலளிக்க வேண்டும். தனியாக கையேடுகள் வாங்கி படிக்க வேண்டாம்; புத்தகமே சிறந்த கையேடு. புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும். வினாக்களை நன்றாக படித்து, குழப்பமின்றி விடையளிக்க வேண்டும்.
தேர்வில் மாணவர்களின் சிரமத்தை தவிர்ப்பதற்காக, தற்போது படமே இல்லாத கேள்விகள் அதிகளவில் கேட்கப்படுகின்றன.
விடையில் உதாரணங்களை குறிப்பிட்டால் முழு மதிப்பெண் கிடைக்கும். வேறுபடுத்தி காட்டும் வகை வினாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அடித்தல், திருத்தல் இன்றி அழகாக எழுத வேண்டும். விரிவான வினாக்களுக்கு உதாரணங்களுடன் விடையளிக்க வேண்டும்.
விஷ்ணுராம் (இயற்பியல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை):
மாணவர்கள் நலமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பெற்றோரும், ஆசிரியரும் மட்டுமே. ஆசிரியர்கள் வகுப்பறையில் சொல் வதை கவனமுடன் கேட்க வேண்டும். கேள்விகளை தேர்வு செய்து எழுதினால், முழு மதிப்பெண் பெற முடியும். பாயின்ட் உள்ள வகையில், கேள்விகளை தேர்வு செய்து எழுதினால், கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.
கணக்கு கேள்விகளை எழுதும் போது, அலகுகள், மதிப்புகளை சரியாக எழுத வேண்டும். பத்து மதிப்பெண் வினாக்களுக்கு மையகருத்தை தத்துவமாக எழுதினால், இரு மதிப்பெண் கிடைக்கும். கேள்விகளுக்கு விடையளித்தபின், அனைத்தையும் சரிபார்க்க வேண்டும். பழைய வினாத்தாள்களை தவறாமல் படித்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இயற்பியல் நல்ல பாடம். தொடர் பயிற்சியிருந்தால், முழு மதிப்பெண் பெறலாம்.
முத்துக்குமார் ( உயிரியல், விலங்கியல், அரசு மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி) : தேர்வில் படங்கள் வரைய வேண்டிய அவசியமின்றி 75 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் கேட்கப்படுகின்றன. 2, 3, மற்றும் 7வது பாடங்களில், ஐந்து மதிப்பெண் வினாக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதுடன், எளிமையாக இருக்கும். 5, 6வது பாடங்களில் 10 மதிப்பெண் கேள்விகளுக்கு விடைகள் எளிமையாக இருக்கும்.
புத்தகத்தில் உள்ள அனைத்து பாயிண்டுகளையும் குறிப்பிட்டால் முழு மதிப்பெண்களை பெறலாம். 10 மதிப்பெண் பகுதியில் தலா ஒன்று வீதம் அதிக மற்றும் குறைந்த விடைப்பகுதி கொண்ட விடைகளை, தேர்வு செய்தால் சிரமம் இருக்காது. முக்கியமான கேள்விக்கு படத்தின் அவுட்லைன் வரைந்து பகுதிகளை குறிப்பிட்டால் போதுமானது.
டெய்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்.ஜி.எம்., மேல் நிலைப்பள்ளி, உடுமலை) : பாடம் படிக்கும்போதே முக்கிய பாயிண்டை அடிக்கோடிட்டு, ஒரு மதிப்பெண் வினாக்களை சேகரிக்கலாம். இரு மதிப்பெண் வினாவிற்கு துணைத்தலைப்பு அளித்து பாயின்டுகளை குறிப்பிட வேண்டும். ஓ.எம்.ஆர்., ஷீட் டில் விடைகளை தெளிவாக குறிப்பிடாவிட்டால், மதிப்பெண் இழக்க வேண்டியுள்ளது. எனவே, டார்க்க்ஷேடு இடவேண்டும். முறையாக படிப்பதுடன் எழுத்துப்பயிற்சியும் மேற்கொண்டு, திட்டமிட்டு படித்தால், முழுமதிப்பெண் இலக்கை எட்ட முடியும்.
பிளஸ்2 கலைப்பிரிவு மாணவர்களுக்காக நடந்த ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கிய டிப்ஸ்:
சேஷநாராயணன் (தமிழ், எஸ். கே.பி., மேல்நிலைப்பள்ளி, உடுமலை) : விடைத்தாளில், விடைகள் நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்க வேண்டும். கருப்பு அல்லது நீல கலர் பேனாவை பயன்படுத்தலாம். மனப்பாடப்பகுதிகளை நன்றாக படிக்க வேண்டும்.
தமிழில் எழுத்து பிழை, சந்தி பிழைகளை முடிந்தவரை குறைக்க வேண்டும். பிழைகளுக்கு மதிப்பெண் குறையும் போது சதம் அடிக்க முடியாது. நெடு வினாக்களுக்கு, முன்னுரையில் ஆசிரியர் குறிப்பு, நூல் குறிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.இவை எழுதினால், ஒரு மதிப்பெண் கிடைக்கும். மனப்பாட செய்யுள் புத்தகத்திலிருந்து இருக்கும்படி அப்படியே எழுதி பழகினால்தான், மதிப்பெண் பெற முடியும். இந்த செய்யுள்களில் பா வகையை குறிப்பிட வேண்டும். திருக்குறள், இலக்கணத்தை நன்கு படித்தால், அதிக மதிப்பெண் கிடைக்கும்.
சுகந்தி லதா (ஆங்கிலம், விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை): ஆங்கில பாடத்தை புரிந்து படித்தால் எளிமையானது. புத்தகத்தின் பின்பகுதியிலுள்ள வினாக்களை நன்றாக படிக்க வேண்டும். தினமும் நேரத்தை பிரித்து ஒவ்வொரு பாடத்தை படித்து பயிற்சி பெற வேண்டும். பாராகிராப் எழுதாமல், பாயின்டுகளாக எழுதினால் மதிப்பெண் கிடைக்கும்.
கடிதத்தில், அனுப்புநர் பெயர் எழுத வேண்டாம். பயோடேட்டா எழுதினல், நான்கு மதிப்பெண்கள் கிடைக்கும். ரோடு மேப் பகுதியில் மூன்று அறிவுரைகள் மட்டும் எழுதினால் போதும். கட்டுரை வினாக்களில், துணைத்தலைப்பிட்டு எழுதலாம். வினாத்தாளை நன்றாக படித்து அவசரப்படாமல் விடையளிக்க வேண்டும்.
நேரத்தை வீணடிக்காமல் நன்றாக தெரிந்த வினாக்களை தேர்வு செய்து முதலில் எழுத வேண்டும். தன்னம்பிக்கை, விடா முயற்சியிருந்தால், ஆங்கிலத்தேர்வில் முழுமதிப்பெண்களுடன் வெற்றி பெறலாம்.
சுகந்தி (வணிகவியல், விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை): வணிகவியலில், 50 சதவீத கேள்விகள் எளிமையாகவும், 40 சராசரி கேள்விகளாகவும், 10 சதவீத கேள்விகள் மட்டுமே கடினமாக உள்ளன. கேள்விகளை தேர்வு செய்யும் போது எளிமையாக தேர்வு செய்ய வேண்டும். பெரிய வினாக்களை முதலில் எழுத வேண்டும். நேரத்தை வினாக்களை பொறுத்து பிரித்துக்கொள்ள வேண்டும்.
குறித்த நேரத்தில் முடிக்கும் வகையிலான வினாக்களை தேர்வு செய்ய வேண்டும். அதிக பக்கங்கள் எழுதினால் மதிப்பெண் அதிகம் பெறலாம் என நினைக்காமல் குறிப்பிட்ட அளவிற்கு விடையளித்தால் மட்டும் போதும். குறித்த நேரத்தில், அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்தால் வணிகத்தில் சதம் நிச்சயம்.
சுப்பிரமணியம் (கணக்குப்பதிவியல், எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, உடுமலை): கணக்கு மற்றும் தியரி இரண்டுக்குமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தியரிகளுக்கு பாயின்டுகளிட்டு விடையளிக்கலாம். இறுதி கணக்கு, ரொக்க திட்டபட்டியலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒற்றைப்பதிவு முறை, கூட்டாண்மை பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஸ்டெப்ஸ்க்கு மதிப்பெண் வழங்கப்படும்.
தெளிவாக விடைகளை எடுத்து எழுத வேண்டும். வினாக்களை தேர்ந்தெடுத்து தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்கவும். கடைசி பத்து நிமிடங்களில், வினா எண் சரியாக குறிப்பிட்டுள்ளதா, விடைகள் சரியாக உள்ளதா என விடைத்தாளை சரிபார்க்க வேண்டும். தீவிரமாக பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே கணக்குகளுக்கு எளிதாக விடையை கண்டுபிடிக்க முடியும்.
ரேணுகாதேவி (பொருளியல், ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி, குறிச்சிக் கோட்டை): பொருளியல் பாடம் திட்டமிட்டு படித்தால், எளியது. 2,5,6,7,8,10,12 பாடங்களிலிருந்து 10 மதிப்பெண் வினாக்களும், 1,3,4,8,9,10 பாடங்களிலிருந்து 20 மதிப்பெண் வினாக்களும் கேட்கப்படும். 3,4,8 பாடங்களை நன்றாக படித்தால் 85 மதிப்பெண்கள் பெறலாம்.
வினா எண்களை தவறாமல் எழுத வேண்டும். பத்தி வினாக்களுக்கு பத்தி பத்தியாக பிரித்து எழுத வேண்டும். முறையான பயிற்சி மேற்கொண்டால் வெற்றி பெறுவது எளிது. தன்னம் பிக்கை, முயற்சி, துணிவு இருந்தால் பொருளியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறலாம். மாணவர்கள் நம்பிக்கையோடு முயன்று பொருளியல் வல்லுநராக மாற முயற்சிக்க வேண்டும்.
மாரிமுத்து (வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை):
வணிக நுண்கணிதத்தில், 10 மதிப்பெண் வினா மூன்றும், 6 மதிப்பெண் வினா மூன்று என மொத்தம் 58 மதிப்பெண் வினாக்கள் உள்ளது. எனவே, இப்பகுதிக்கு முக்கியத்துவம் அளித்து படிக்க வேண்டும். பார்முலாக்களை நன்றாக படித்து நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தேவையான வினாக்களுக்கு பார்முலாக்களை எழுதினால், இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மாணவர்கள் விடைத்தாளில் மார்ஜின் போட வேண்டும். ஒரு மதிப்பெண் விடைகளை தொடர்ச்சியாக எழுத வேண்டும். மார்ஜின் பகுதியில் கேள்வி எண், ஆப்ஷனை எழுதுவது முக்கியம். அட்டவணைகள் எழுதும் போது ஒரே பக்கத்தில் முடியுமாறு எழுதலாம்.
மாணவர்கள் தேர்விற்கு செல்வதற்கு முன்னர் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். மாணவர்கள் குறிப்புகள் தயார் செய்து படிக்க வேண்டும். புள்ளியியல் பாடத்தில் 1,3,5,6,8,10 பாடங்களில் அதிக கவனம் தேவை. 2 மதிப்பெண் இடம் பெற்றுள்ள குறிப்பிட்ட சில பாடங் களை மட்டும் படித்தால் போதுமானது.
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பொறுத்தவரை நேரம் மிக முக்கியம். எனவே,ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்கும் நேரத்தை பிரித்துக்கொள்வது அவசியம். வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி. எனவே, முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.
விஜயலட்சுமி (வரலாறு, அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, உடுமலை): வரலாறு பாடம் கால நிகழ்வுகள் மற்றும் ஆண்டுகள் முக்கியமானது. ஆசிரியர்கள் பாடங்கள் எடுக்கும் போது கூறும் கால நிகழ்வுகள் மற்றும் ஆண்டுகளையும் குறிப்பெடுத்தால் கோடிட்ட இடங்கள் போன்ற பகுதிகளில் எளிதாக விடையளிக்க முடியும். தேர்வில் வெற்றி பெற முறையான பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். பத்து மதிப்பெண் வினாக்களுக்கு பாயிண்டுகளாக விடையளிக்கலாம்.சில வினாக்களுக்கு தலைப்பிட்டு எழுதினால், முழு மதிப்பெண் பெறலாம். முதலில் பெருவினாக்களுக்கும், ஆறு மதிப்பெண் வினா, கடைசியாக ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கலாம். மேப் வரையும் போது பேரரசு வரைந்தால், ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.
